நிர்வாணப் படங்களை பிரசுரிக்கலாம் : இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி!!

376

Indian High Courtஒரு நல்ல சமூக செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்கு நிர்வாணப் படங்களை பிரசுரிக்கலாம். அதில் தவறில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஒரு பெண்ணின் நிர்வாணப் படத்தை இதுபோன்ற காரியங்களுக்காக வெளியிடும்போது, அது ஆபாசம் இல்லாததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனந்தபஜார் பத்ரிகா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் ஆகிய பத்திரிகைகளில் கடந்த 1993ம் ஆண்டு டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் மற்றும் அவரது காதலியின் நிர்வாணப் படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

ஜெர்மனிப் பத்திரிக்கையில் வெளியான புகைப்படங்களை இந்த இரு பத்திரிகைகளும் எடுத்துக் கையாண்டிருந்தன. இதையடுத்து இவர்கள் மீது ஐபிசி 292வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மேற்கு வங்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை எதிர்த்து இரு பத்திரிகைகளும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அதை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் நிறவெறிக்கு எதிரான சமூக செய்தியை தங்களது படத்தின் மூலம் அளித்துள்ளனர். நிறத்தை வைத்து ஒருவரைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதை இந்தப் படங்கள் உணர்த்தியுள்ளன. அந்த செய்தியும் முறையாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும் தனது காதலியின் இரு மார்புகளையும் போரிஸ் பெக்கர் தனது கரங்களால் மறைத்துள்ளார். எனவே இந்தப் படத்தில் ஆபாசம் என்று எதுவும் இல்லை. நல்ல சமூக செய்திக்காக இந்தப் படங்களையும், இந்த போஸும் தரப்பட்டுள்ளது.

எனவே ஆபாசமில்லாத வகையில் ஒரு நல்ல செய்தியை சமூகத்திற்குச் சொல்வதற்காக இதுபோன்ற நிர்வாணப் படங்களை வெளியிடுவதில் தவறில்லை என்று நாங்கள் கருதுகிறோம். ஒருவரது மனதில் ஆபாசமான எண்ணத்தை அது விதைக்காத வரையில் அதை ஆபாசம் என்று கூற முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.