இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள மலேசிய விமானத் தேடுதல் வேட்டை!!

285


Flight

கடந்த மாதம் 8ம் திகதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட மலேசிய விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே ராடாரிலிருந்து மறைந்துபோனது.



மாயமாய் மறைந்த இந்த விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக அவுஸ்திரேலியாவைத் தலைமையாகக் கொண்டு உலகின் பல நாடுகள் தேடிவந்தன.

தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திலிருந்து தொலைதூரப் பகுதிகளில் தேடுதல் முயற்சி நடைபெற்றுவந்தது. உபயோகமான தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில் விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து சிக்னல்கள் கிடைத்ததாகக் கூறப்பட்ட பகுதியையும் இந்த மீட்பு அமைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்துவந்தன.



கறுப்புப் பெட்டியின் பட்டரியும் 30 நாட்களில் செயலிழந்துவிடும் என்ற நிலையில் அதிலிருந்து வந்த சிக்னல்களும் நின்றதாகக் கூறப்படுகின்றன. இறுதியாக சிக்னல்கள் கேட்ட கடற்பகுதியில் நீருக்குள் ஆய்வு செய்யும் அமெரிக்கத் தயாரிப்பான புளூபின்-21 என்ற சோனார் கருவி ஒன்று இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.



4,500 மீ ஆழம் வரை செல்லக்கூடிய இந்தக் கருவி கறுப்புப் பெட்டியிலிருந்து சிக்னல் கேட்ட தூரத்திற்கு ஒத்துள்ளதால் இதன்மூலம் ஏதேனும் தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். ஏழாவது வாரத்தைத் தொட்டுள்ள இந்தத் தேடுதல் முயற்சியில் இதுவரை எந்தத் தகவலும் கிட்டவில்லை.


இந்த நீர்மூழ்கிக் கருவியை செயல்படுத்த ஏதுவான வானிலையுடன் சோனார் கருவியும் நன்கு செயல்படும் தன்மையுடன் இருக்கும்பட்சத்தில் இந்தத் தேடுதல் வேட்டை 5-7 நாட்களுக்குள் முடிந்துவிடும் என்று எம்ஹெச்370 விமானத்தின் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ள கூட்டு நிறுவனம் ஒருங்கிணைப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.