50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த சகோதரிகள்!!

722

Ladies

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பிரிந்த சகோதரிகள், சென்னையில் சந்தித்துக் கொண்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள், சுப்பையா – ராமாயி தம்பதி. இவர்கள் தங்களது, 9 வயது மகள் காளியம்மாளுடன் பிழைப்புதேடி 1947ல் பர்மா சென்றனர். அங்கு இவர்களுக்கு பஞ்சவர்ணம் என்பவர் உட்பட மேலும், மூன்று குழந்தைகள் பிறந்தன.

காளியம்மாள் மற்றும் பஞ்சவர்ணத்திற்கு பர்மாவிலேயே அடுத்தடுத்து திருமணம் நடந்தது. இருவரின் கணவர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். காளியம்மாளின் கணவர், பர்மா உளவுத் துறையில் பொலிசாகவும், பஞ்சவர்ணத்தின் கணவர், பிளாஸ்டிக் பை தயாரிக்கும் பணியும் செய்து வந்தனர். திடீரென, பஞ்சவர்ணம், தமிழகம் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பஞ்சவர்ணம் அவரது கணவர் மற்றும் ஆறுமாத பெண் குழந்தையுடன், அகதிகளாக, 1965ல் தமிழகம் திரும்பினர். காளியம்மாள், தன் கணவருடன் பர்மாவிலேயே தங்கி விட்டார். அவ்வப்போது, அக்கா காளியம்மாளுடன், பஞ்சவர்ணம், கடித தொடர்பு வைத்திருந்தார்.

சென்னையில், பல்வேறு இடங்களில் வீடு மாறிய நிலையில், இருவர் இடையே, தொடர்பு நின்று போனது. 10 ஆண்டுகளுக்கு பின் பர்மாவில் இருந்து வந்த உறவினர் மூலம் மீண்டும் இருவரது தொடர்பும் துளிர்விட்டது. இந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு, பாஸ்போர்ட் எடுத்த பஞ்சவர்ணம், 2013ல், விமானம் மூலம், பர்மாவுக்கு சென்றார். அங்கு அக்கா, அவரது கணவர் மற்றும் அவர்களது 11 குழந்தைகளின் அன்பு பிடியில் சிக்கிய, பஞ்சவர்ணம், கனத்த இதயத்துடன் சொந்த ஊர் திரும்பினார்.

அடுத்த சில நாட்களில், காளியம்மாளின் கணவர், உடல் நலக்குறைவால், தன் 86வது வயதில் மரணமடைந்தார். இந்நிலையில், 75 வயதான காளியம்மாள், 50 ஆண்டுகளுக்கு பின், தங்கையை பார்க்க, கடந்த, 9ம் திகதி மகன் மற்றும் மகள் உதவியுடன் சென்னை வந்தார். அவரை, பஞ்சவர்ணத்தின் கணவர் சுடலைமுத்து மற்றும் அவர்களின், ஏழு வாரிசுகளும், அன்புடன் வரவேற்றனர்.

தமிழகத்தில் பிறந்து, பர்மாவில் வாழ்ந்து வரும் காளியம்மாள்; பர்மாவில் பிறந்து, தமிழகத்தில் வாழ்ந்து வரும் பஞ்சவர்ணம், ஆகியோரின் இந்த சந்திப்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவாங்கேணியில் நடந்தது.

மூன்று தலைமுறைகளை கண்டுவிட்ட இந்த சகோதரிகள், கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்து, பேசி மகிழ்ந்தனர். இன்னும், 20 நாட்களில், காளியம்மாள் மியான்மர் திரும்ப வேண்டும். இருந்தாலும், இந்த சந்திப்பு வரும் தலைமுறைக்கான, ஒரு இணைப்பு பாலமாக அமைந்து விட்டது.