வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்தும் தமிழ் மாருதம் 2016 : மாபெரும் கலை இலக்கிய விழா!!

612


Tamil Maamanram

வவுனியா மாவட்டத்திலே 2013 முதல் தமிழ் மொழி, இலக்கிய மற்றும் கலைத்துறைகளில் பலதரப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தமிழ் மாமன்றமானது, பிரதேசக் கலை இலக்கிய ரசனை மேம்பாட்டினை ஏற்படுத்தும் பொருட்டு 2014 முதல் ஒவ்வொரு வருடமும் முத்தமிழுக்கும் விழா எடுத்து வருகின்றது.



2014 இலே இயல் விழா என்னும் பெயரிலும் 2015 இலே தமிழ் மாருதம் 2015 எனும் பெயரிலும் ஒரு நாள் விழாவாக இடம்பெற்றுக் கலை இலக்கிய ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்ற இவ்விழாவானது, இந்த ஆண்டு தமிழ் மாருதம் 2016 என்னும் பெயரில், இரு நாட்கள் இடம்பெறும் விழாவாக வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வருகின்ற செப்டெம்பர் 3ம் திகதி மாலை 4 மணிக்கு வவுனியா பொது நூலக சரஸ்வதி சிலையில் இருந்து ஊர்வலமாக ஆரம்பிக்கும் இந்நிகழ்வு, செப்டெம்பர் 4ம் திகதி காலை மாலை இரு நேரமும் இடம்பெறவுள்ளது.



காலை நிகழ்வுகள் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 12.30க்கு நிறைவு பெறுவதுடன், மாலை நிகழ்வுகள் மாலை 4.00க்கு ஆரம்பமாகி 8.30 மணிக்கு நிறைவு பெறும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



அத்துடன் பூபாலசிங்கம் புத்தகசாலையின் பங்களிப்புடனான புத்தக மலிவு விற்பனைக் கண்காட்சியும், சித்திரக் கண்காட்சியும் இணைந்ததாக இவ்விழா சிறக்கவுள்ளது.


வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம் என இலங்கையின் பல பாகங்களில் இருந்து சிறப்புப் பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள். கம்பவாரிதி.
இ.ஜெயராஜ் சிறப்புப் பேச்சாளராக நிகழ்வைப் பெருமைப்படுத்துகிறார். அத்துடன் பேராசிரியர் தி. வேல்நம்பி, செஞ்சொற்செல்வர் இரா.செல்வவடிவேல், கலாநிதி செ.சேதுராஜா, அ.வாசுதேவா போன்ற விசேட பேச்சாளர்களும், கவிஞர் ச.முகுந்தனும் யாழ்ப்பாணத்திலிருந்து பங்கேற்கிறார்கள்.

தமிழ்மணி மேழிக்குமரன், இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரன், பண்டிதர் வீ.பிரதீபன், வித்தியாரத்னா சி.வரதராஜன், திரு.என்.கே.கஜரூபன் போன்ற சிறப்புப் பேச்சாளர்கள் வவுனியாவில் இருந்து பங்கேற்கிறார்கள்.


இவர்கள் அனைவரின் ஒன்றிணைவிலும் வழக்காடு மன்றம், பட்டி மன்றம், சுழலும் சொற்போர், கவியரங்கம் போன்ற இயற்றமிழ் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

‘சிதம்பரம் இசைமைந்தன்’ நயினை ப.சிவமைந்தன் குழுவினர் வழங்கும் இசை அரங்கோடு, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் நாட்டார் பாடலும், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி அ.கவிநயாவின் இசையும் அசைவும் ஆகியன இசைத்தமிழ் நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளது.

“சிதம்பரேஸ்வரம் நடனாலயம்” வழங்கும் “தமிழ் மூச்சு” என்னும் நாட்டிய அளிக்கையும், “பாரத நர்த்தனாலயா” மாணவிகளின் கலச நடனமும் நிகழ்வைச் சிறப்பிக்கவுள்ளது.

“கலைநிலாக் கலையகம்” வழங்கும் “மறந்துபோன சுவடுகள்” நாடகம் நாடகத்தமிழ் நிகழ்வாக இடம்பெறவுள்ளது.


வன்னிப் பிரதேசத்தின் மாபெரும் கலை இலக்கிய நிகழ்வான தமிழ் மாருதம் 2016ல் ஆர்வம் கொண்ட அனைவரையும் பங்கேற்று நிகழ்வினைச் சிறப்பிக்குமாறு தமிழ் மாமன்றத்தினர் தாழ்மையுடன் அழைக்கிறார்கள்.

20 21 22 23