ஆபத்தை ஏற்படுத்தும் குறட்டை!!

522

kurttai

சிறிது காலம் முன்பு வரை குறட்டையை ஒரு நோயாகவே கருதவில்லை. குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தால் அவரை லேசாக தொட்டு பக்கவாட்டில் படுக்கவைத்துவிடுவார்கள். அவர்களும் சிறிது நேரத்தில் குறட்டை விடுவதை தவிர்த்துவிடுவார்கள்.

இவர்கள் தூக்கம் கெடாது. ஆனால் தற்போது குறட்டையைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, குறட்டை ஒரு நோய் என்றும், உயிருக்கே ஆபத்தை வரவழைக்கக்கூடிய ஒரு விடயம் என்றும், எம்முடைய உறக்கத்தின் போது சுவாசிக்கின்ற காற்றானது இயல்பாக சென்று வரவில்லை என்பதன் அறிகுறி தான் இது என்றும் கண்டறிந்துள்ளனர்.

மூக்கு வழியாக தொடங்கும் சுவாசமானது இறுதியில் நுரையீரல் வரை சென்று திரும்பவேண்டும். இடையில் எங்கேனும் தடைப்பட்டால் அவை குறட்டையாக மாறக்கூடும். பெரும்பாலும் கழுத்துப்பகுதி, உள்நாக்கு, நாக்கின் அடிப்பகுதி ஆகிய பகுதியில் ஏற்படும் தடையே குறட்டையாக மாறுகிறது.

இந்த குறட்டை தூக்கத்தை கெடுக்கிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனைக்கு முதலில் முகங்கொடுக்கவேண்டியதிருக்கும். இதனால் சோர்வு ஏற்படும். பகலில் தூங்கவேண்டும் என்ற எண்ணம் உருவாகும். பணிகளும், பணித்திறனும் பாதிக்கப்படும். உடலுக்கு தேவையான ஓய்வும், தூக்கமும் கிடைக்கவில்லை என்பதன் அறிகுறியாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். இதனால் குறட்டைக்கு கண்டிப்பாக சிகிச்சை அவசியமாகிறது.

மருத்துவர்கள் குறட்டை விடும் நோயாளிகளுக்கு முதலில் ஸ்லீப் ஸ்டடி என்ற ஒரு சோதனையை செய்வார்கள். இந்த சோதனை மூலம் உறக்கத்தில் அவர்களின் இரத்த அழுத்தம், பல்ஸ் ரேட், ஓக்ஸிஜன் பயன்படுத்தும் அளவு ஆகியவற்றை கண்டறிவார்கள். குறிப்பாக எத்தனை மணித்தியாலங்களுக்கு அவர்களுக்கு ஓக்ஸிஜன் குறைகிறது என்பதை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

அதற்கேற்ற வகையில் மருத்துவ சிகிச்சைகள் இருக்கும். இதனை அலட்சியப்படுத்தினால் இதயம் தொடர்பான கோளாறுகள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ஒரு சிலர் குறட்டைக்கு உரிய சிகிச்சை எடுக்க மறுத்ததால் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவங்களும் உண்டு.

இவர்களில் ஒரு சிலருக்கு டைனமிக் எம்ஆர்ஐ என்ற பரிசோதனையும் மேற்கொள்வதுண்டு. இதனடிப்படையில் குறட்டைக்கு சத்திர சிகிச்சை மூலமாகவும் தீர்வு கிடைக்கிறது. சத்திர சிகிச்சை மூலமாக குரல்வளையத்தை சற்று பெரிதாக்கி, குறட்டையை இல்லாது செய்வார்கள். அல்லது காற்று உள்ளே சென்று வெளியே வருவதற்கான அடைப்பை இல்லாது செய்துவிடுவார்கள். சத்திர சிகிச்சையை விரும்பாதவர்களுக்கு ஹீ பொப் என்றொரு கருவியைப் பொருத்திக்கொண்டு உறங்கவேண்டும். இந்த கருவி காற்றை வேகமாக அனுப்பி குரல்வளையத்தை பாதிக்காமல் பாதுகாக்கிறது. இதனால் ஓக்ஸிஜன் தங்குதடையின்றி சென்று வரும்.