சாவகச்சேரி விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் விசேட விமானம் மூலம் கொழும்பிற்கு!!

353


 
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 11 பேரின் சடலங்களும் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த சடலங்களை விசேட விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விசேட விமானம் மூலம் ரத்மலானை வான் தளத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கொழும்பிற்கு கொண்டு வரப்படும் என யாழ்ப்பாணம் மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



சாவகச்சேர், சங்கத்தானையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஹொரணை – மில்லனிய பிரதேசத்தை சேர்ந்த 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.கணபதிப்பிள்ளை நேரில் பார்வையிட்டு மரண விசாரணையை நடத்தினார். தொடர்ந்த யாழ்.போதனாவைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மயூதரன் மேற்கொண்டார்.



இதற்கமைய உயிரிழந்தவர்களின் நெஞ்சு பகுதி மற்றும் வயிற்று பகுதிகளில் பலமாக அடி பட்டிருப்பதாகவும் அதனாலேயே மரணம் சம்பவித்திருக்கிறது எனவும் கூறியுள்ள சட்டவைத்திய அதிகாரி விபத்து சம்பவித்து சில நிமிடங்களிலேயே இவர்கள் மரணித்திருப்பர்கள் எனவும் கூறியுள்ளார்.



இந்நிலையில் உயிரிழந்த 11 பேரில் மாத்தளைப்பகுதியை சேர்ந்தவரின் சடலம் உறவினர்களால் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் மற்றய 10 பேருடைய சடலங்கள் இலங்கை விமானபடையினரால் விசேட உலங்கு வானூர்தி மூலம் களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வாகனங்கள் ஊடாக அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.


இதே வேளை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் அதிகாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தனர்.

அவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட சகல வசதிகளையும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஒழுங்கமைத்து வழங்கியிருந்தார். இதேவேளை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் யாழ்.மக்களுக்கு நன்றி கூறியுள்ளனர்.