அல்கஹோல் புற்றுநோயை உண்டாக்கும் : ஆய்வில் தகவல்!!

481

நியூசிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வில் அல்கஹோல் காரணமாக மனித உடலில் 7 விதமான புற்றுநோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் உட்பட பல அமைப்புக்களின் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புள்ளிவிபரங்களைத் தாண்டிய உண்மை பிணைப்பு புற்றுநோய்க்கும் மதுவுக்கும் இருப்பதையே இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், மலக்குடல், மார்பு ஆகிய 7 பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கு மதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

மது அருந்துபவர்களுக்கும் அருந்தாதவர்களுக்கும் இடையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள், புதிய வகையான புற்றுநோய்களில் 5 வீதமானவை அல்கஹோல் காரணமாக ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
மேலும், ஆண்டுக்கு 4.5 வீதமான இறப்புக்கள் ஏற்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தவிர அல்கஹோல் காரணமாக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதை பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய வகை மார்பகப் புற்றுநோயுடன் அல்கஹோல் பாவனை தொடர்புபட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பணக்காரர்களுக்கு இந்த அபாயம் அதிகம் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வளந்து வரும் நாடுகளில் மெதுவான அதிகரிப்பு தென்படுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருந்த ஆய்வொன்றில், குறிப்பாக பணக்கார நாடுகளில் 700,000 க்கும் அதிகமான புதிய வகை புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன், அந்த ஆண்டில் 366,000 பேர் புற்றுநோயால் உயிரிழந்தமை கண்டறியப்பட்டது.