16 அறுவை சிகிச்சைகள்: ஓராண்டின் பின் குணமான வங்கதேச மர மனிதன்!!

425


மர மனிதன் என அறியப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த அபுல் பாஜாந்தர், கடந்த ஒரு வருட கால சிகிச்சையின் பின்னர் குணமாகியுள்ளார்.



வங்கதேசத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டமான கால்னா பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி அபுல் பாஜாந்தர் (24), எபிடர்மாடிஸ்பிளாசியா வெருசிபார்மிஸ் எனும் அரியவகை மரபு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்.

இந்த நோயினால் அவரது கை மற்றும் கால்களில் மருக்கள் வளர்ந்து, கடினமான தோல் வேர்கள் போல் வளர்ந்ததன் காரணமாக அவரை மக்கள் மர மனிதன் என அழைத்தனர்.



இந்த நோய் தாக்கியதன் பின்னர், பெற்றோரின் மறுப்பையும் மீறி ஹலிமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் தற்போது உள்ளது.



குழந்தை பிறந்த பின்னரே அபுலுக்கு கை, கால்களில் மருக்கள் நீளமாக வளர ஆரம்பித்தன. இதனால் அவரால் முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலிலும் ஈடுபட முடியாமற்போனது.


அபுலுக்கு வந்த நோய் குறித்து அறிந்த டாக்கா மருத்துவக் கல்லூரி இலவச சிகிச்சை அளிக்க முன்வந்தது. அதன் அடிப்படையில், கடந்த ஒரு வருடமாக அபுல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு அறுவைசிகிச்சை நிபுணர் சமந்தாலால் சென் தலைமையில் 16 அறுசை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருக்கள் அகற்றப்பட்டுள்ளன.


இன்னும் சில அறுவைசிகிச்சைகளின் பின்னர் அபுல் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அபுலின் சிகிச்சைகளுக்காக நல்லுள்ளம் படைத்த பலரும் உதவிகளை செய்துள்ளனர்.

மரநோய் தாக்கம் என அறியப்படும் மிகவும் அரிதான மரபணு மாற்ற நோயினால் உலகத்தில் நால்வர் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்நோயினால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

மருத்துவ உலகில் இந்த நோய் தாக்கி முழுவதும் குணமான முதல் நபர் அபுல் மட்டும் தான்.