வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் ம.தர்மசீலன் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை!!

1050

நேற்று முன்தினம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர முடிவுகளின்படி உயிர் முறைமைகள் தொழினுட்பப் பிரிவில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் செல்வன் மணிவேல் தர்மசீலன் 3A சித்திகளை பெற்று மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 5ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மிகவும் வறுமை நிலையிலும் பெற்றோர்களினதும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இம் மாணவன் இச் சாதனையை படைத்துள்ளமை இங்கு பெருமைப்படவேண்டிய விடயம்.

நகர்ப்புற பாடசாலைகளுக்கு நிகராக கிராமப்புற பாடசாலை மாணவர்களாலும் சாதிக்கமுடியும் என்பதை இம் மாணவன் நிரூபித்துள்ளார்.

மிகவும் வறிய நிலையில் உள்ள இம் மாணவன் மேற்படிப்பைத் தொடர்வதற்கு நல்லுள்ளம் கொண்டவர்கள் தம்மால் முடிந்த உதவிகளை வழங்குமாறு தாழ்மையுடன் கெள்ளுக்கொள்கின்றோம்.

உதவி செய்ய விரும்புவோர் செட்டிகுளம் பாடசாலை அதிபரின் கீழுள்ள தொலையேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு நேரடியாக உதவிகளை செய்யமுடியும்

தொடர்புகளுக்கு : 0772365649

தனது வெற்றிகுறித்து மணிவேல் தர்மசீலன் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்..

எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. கஸ்ரப்பட்டுத்தான் படித்தேன். ஆனால் இப்படி வருவேன் என எதிர்பார்க்கவில்லை. எனது அம்மா, அப்பா தோட்டம் செய்து தான் என்னை படிக்க வைத்தார்கள். நானும் அவர்களுடன் இணைந்து விடுமுறைநாட்களிலும், மாலைவேளைகளிலும் தோட்டம் செய்துதான் படித்தேன்.

எனது கிராமம் செட்டிகுளம், நித்திக்குளம் என்ற மிகவும் பின் தங்கியது. இக் கிராமத்தில் இருந்து எனது பாடசாலை 9 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. அதில் இரண்டு கிலோமீற்றர் தூரம் வாகனப் போக்குவரத்து இல்லை. நடந்து சென்று பிரதான வீதிக்குச் சென்று பேரூந்தில் ஏறி தான் பாடசாலை சென்று படித்தேன். சில நாட்களில் முதலாம் பாடம் முடிந்த பின் கூட நான் பாடசாலை போன சம்பவம் கூட இடம்பெற்றுள்ளது.

பிரத்தியேக வகுப்புக்கு இரண்டு பாடத்திற்கு சென்றிருந்தேன். அதற்கு 15 கிலோமீற்றர் பேரூந்தில் சென்றே படித்தேன். இப்படியான ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து ஒரு விவசாயியின் மகன் வடமாகணத்தில் முதலிடம் பெற உழைத்தவர்களை என்னால் மறக்க முடியாது.

எனது பாடசாலை அதிபர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், நான் நடந்து செல்லும் போது சில சந்தர்பங்களில் என்னை ஏற்றி பேரூந்து வரும் பாதையில் இறக்கிவிட்ட இந்த ஊர் மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தமது வியர்வை சிந்தி என்னை படிக்க வைத்த அம்மா, அப்பா எல்லோருக்கும் எனது நன்றிகள்.

எதிர்காலத்தில் பரீட்சை எழுதவுள்ள எனது தம்பி, தங்கையர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒரு விவசாயி மகனான என்னால் நடந்து சென்று இவ்வளவு கஸ்ரத்திற்கு மத்தியில் சாதிக்க முடிந்திருக்கின்றது என்றால் ஏன் உங்களால் முடியாது. நிச்சயமாக ஒவ்வொரு மணித்துளிகளையும் பயனுள்ளதாக பன்படுத்துங்கள். வெற்றி பெறுவீர்கள் எனத்தெரிவித்தார்.

பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துவதில் பெருமைக்கொள்கின்றோம்.

சென்ற ஆண்டும் செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் செல்வன் யோகேந்திரன் யனுசன் இயந்திரவியல் தொழிநுட்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.