வவுனியா சிதம்பரபுரம் கிராமசேவையாளரை இடமாற்றம் செய்யமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை!!

318

 
வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்டம் பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் கிராமசேவையாளரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து இன்று (10.01.2017) காலை 10.30 மணியளவில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து பொது நோக்கு மண்டபத்தில் வைத்து வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் ம. ஆனந்தராஜிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், தமது பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் கிராம சேவையாளர் சிறந்த சேவையினை வழங்கவில்லை எனவும் மாறாக தனக்குத் தேவையானவர்களுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் தமது கிராம நலனில் அக்கறையற்றுச் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மகஜரினைப் பெற்றுக்கொண்ட ம.ஆனந்தராஜ் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக தனக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் இப்பகுதி மக்களினால் வீடு பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் சென்று கலந்துரையாடி பொருத்து வீடுகள் பெற்றுக் கொடுப்பதற்கு வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையடியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மறுபடியும் இன்று குறித்த பகுதியில் கடமையாற்றும் கிராமசேவையாளரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து விடிவெள்ளி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் மனுக்கொடுக்கப்பட்டுள்ளது.