கால்கள் அகற்றப்பட்டதா : ஜெயலலிதாவின் மரணம் பற்றிய வழக்கில் 3 கேள்விகள்!!

428

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மர்ம மரணம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் , அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் திகதி மர்மமான முறையில் இறந்துள்ளார்.

அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதேபோல, நாகை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ஞானசேகரன், டிராபிக் ராமசாமி ஆகியோரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதிக்கு சந்தேகம்

அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் தொடர்ந்த வழக்கை முன்பு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கு பல சந்தேகங்கள் உள்ளன.

அவரது உடலை தோண்டி வெளியில் எடுத்து பரிசோதித்தால் தான் உண்மைகள் எல்லாம் வெளியில் வருமா?’ என்று கேள்வி எழுப்பினார். நீதிபதியின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்ய மாநில அரசு சார்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது.

பகிரங்கப்படுத்த வேண்டுமா?

அதற்கு நீதிபதிகள், ‘ஜெயலலிதா தமிழகத்தின் முதல்–அமைச்சராக இருந்தவர் என்பதற்காக, அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து மருத்துவ சிகிச்சை விவரங்களையும் பகிரங்கமாக வெளியில் சொல்ல வேண்டுமா?

அல்லது உடல்நல குறைவு, அதுதொடர்பான மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை ஜெயலலிதாவின் அந்தரங்கமாக கருதக்கூடாதா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன.

ஒருவேளை வெளியில் சொல்லவேண்டும் என்றால், நாளை பொதுஅலுவல் பதவிகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், ஜலதோசம் வந்தால் கூட அந்த விவரங்கள் வெளியிட வேண்டியது வருமா?

அதேபோல, ஒரு நோயாளியின் சிகிச்சை விவரங்களை ஒரு ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்துள்ளது’ என்று கருத்து தெரிவித்தனர்.

கால்கள் அகற்றப்பட்டதா?

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘ஜெயலலிதாவின் மரணத்தை சுற்றி எழுந்துள்ள பல சந்தேகங்களினால் பொதுமக்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பே அவரது கால்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை பார்க்க மாநில கவர்னரை கூட அனுமதிக்கவில்லை’ என்றார்.

அதற்கு, கால்கள் அகற்றப்பட்டதாக எந்த ஆதாரங்களை கொண்டு கூறுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது வேதனைப்படுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று கருத்து கூறினார்கள்.

அதற்கு மூத்த வக்கீல், ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது’ என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நேதாஜி மர்ம சாவு ஆங்கிலேயர் காலத்தில் நடந்தது. அதையும், ஜெயலலிதாவின் சாவையும் சம்பந்தப்படுத்தக்கூடாது’ என்றார்கள்.

மர்மம் இல்லை

அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த ஒரு மர்மமும் இல்லை.

மனுதாரர் வக்கீல்கள், பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த அனைத்து ஆதாரங்களும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் உள்ளது.

இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டால், அந்த விவரங்களை மூடிமுத்திரையிட்ட உரையில் தாக்கல் செய்ய தயாராக உள்ளது’ என்று கூறினார்.

3 கேள்விகள்

இதையடுத்து நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்கள் யாரும் அவரது சாவில் மர்மம் உள்ளது என்று கூறி வழக்கு தொடரவில்லை. அதனால், இந்த வழக்கில் 3 கேள்விகள் எழுந்துள்ளன.

ஒன்று, இந்த வழக்கை தொடர அ.தி.மு.க. தொண்டர்கள் இருவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் அடிப்படை உரிமை உள்ளதா? என்பதை பார்க்கவேண்டும்.

இரண்டாவது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் குறிப்பிட்ட சந்தேகம் எதுவும் உள்ளதா?.

மூன்றாவது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களில், எதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தலாம்?.

இந்த 3 கேள்விகளுக்கு விடை காணவேண்டியதுள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பதில் அளிக்க வேண்டும்

எனவே, அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் தாக்கல் செய்த வழக்கிற்கு, பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இயக்குனர் உள்ளிட்டோர் தனித்தனியாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 23–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதே நேரம் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யாததால், அந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

– Daily Thanthi-