மூளையின் ஆரோக்கியத்தைக் காக்கும் உறக்கம்!!

461

குழந்தைகள் உறங்குவதைப் பார்த்திருப்போம். அவர்களின் ஆழ்ந்த உறக்கத்தையும் கண்டிருப்போம். நாமும் குழந்தையாக இருக்கும் போது இப்படி தான் ஆழ்ந்த உறக்கத்தினை மேற்கொண்டிருப்போம். ஆனால் தற்போது மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறையால் உறக்கத்தைத் தொலைத்தோம்.

ஒரு சிலர் ஆழ்ந்த தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார்கள். இந்நிலையில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் அல்லது குறைவாக உறங்குபவர்கள் நாளடைவில் அவர்களின் மூளையின் ஆரோக்கியத்தைஇழந்து வருகிறார்கள் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது 30 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் தங்களின் பணிப்பளு, உறவு மேலாண்மை, மன அழுத்தம். புறச்சூழல் மற்றும் அகச்சூழல் காரணமாக உறக்கத்தை சரிவர மேற்கொள்வதில்லை.

இதனால் மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் செல்கள் தங்களின் வலிமையான ஆயுளை விரைவிலேயே இழக்கின்றனவாம். மூளையின் செல்கள் சுறுசுறுப்புடன் இயங்கவில்லை என்றால் எம்முடைய நாளாந்த நடவடிக்கையிலும் அவை பிரதிபலிக்கக்கூடும். எனவே தூக்கமின்மையை தவிர்த்து, அவரவர்கள் பணிக்கும், வருவாய்க்கும். இனிய உறவுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல் தூக்கத்திற்கும் கொடுக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர் வலியுறுத்துகிறார்கள்.

நல்லதொரு உறக்கம் அமைய என்ன செய்யவேண்டும் என்று கேட்பவர்களுக்கு இந்த பட்டியல் உதவும்

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுவதையும்,உறங்குவதையும் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். தினமும் இயற்கையான சூரிய ஒளி உங்களின் உடலில் படும் அளவிற்கு ஒருநேரத்தை ஒதுக்கிக் கொள்ளவேண்டும். தினமும் இரவு உணவை உறங்கச் செல்வதற்கு 3 மணித்தியாலத்திற்கு முன்பாக முடித்துக் கொள்ளவேண்டும். மது அருந்துவதை அதிலும் உறக்கத்திற்காக மது அருந்துவதை முற்றாக தவிர்ப்பது நல்லது.

மதிய உணவிற்கு பின் பால் கலக்காதகோப்பி அருந்துவதை முற்றாக தவிர்க்கவேண்டும். படுக்கையறையில் உறங்குவதற்கு முன் எக்காரணம் கொண்டும் செல்போன்களையோ, மடிக்கனணிகளையோ அல்லது வேறு எந்த இலத்திரனியல் கருவிகளையோ பயன்படுத்திக்கூடாது. அதேபோல நீங்கள் செல்லம் கொடுத்து வளர்த்தாலும் செல்லப்பிராணிகளுடன் உறங்கவேகூடாது. அதே போல் உங்களின் படுக்கையறை துணைவி அல்லது துணைவருடன் உறங்கச் செல்லும் முன் எக்காரணம் கொண்டு எத்தகைய விவாதங்களிலும் ஈடுபடவேண்டாம்.

இந்த காரணங்களையும் மனதில் வைத்துக் கொண்டு தூக்கத்தை முறைப்படுத்திக் கொள்ளுங்கள். ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள். உறக்கம் என்பதும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியே.