கலவர பூமியாக மாறிய வவுனியா மத்திய பேருந்து நிலையம்!!(காணொளி)

1044

 
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து சங்க உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதுடன், வவுனியாவில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று காலை அரச பேருந்து நிலையத்திற்குச் சென்ற பொலிஸார் அரச பேருந்துகளை நேற்று புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.

இதற்கு பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் மறுப்புத் தெரிவித்ததுடன் தமது மேலதிகாரியிடமிருந்து உத்தரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இரு பகுதியினருக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் தனியார் பேருந்து ஒன்று அரச பேருந்து தரிப்பிடத்திற்குள் நுழைந்ததையடுத்து இரு பகுதியினருக்கும் இடையே மோதல் தோன்றியது.

இதனிடையே வவுனியா வர்த்தகர் சங்கத்தினரும் பேருந்து தரிப்பிடத்திலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளும் அரச பேருந்து சாரதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேருந்து நிலையப் பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை மூடி தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். எனினும் பதற்றமான நிலை அப்பகுதி எங்கும் நீடித்து வவுனியா பொலிஸ் நிலையம் வரை நீடித்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

11.30 மணியளவில் பொலிஸாரின் தலையீட்டையடுத்து அரச மற்றும் தனியார் பேருந்து சங்க உறுப்பினர்களிடையே வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியலாயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பேருந்துக்களை செல்லவிடாமல் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் பேருந்துக்களுக்கு முன்னால் அமர்ந்து இருந்து வருகின்றனர். வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை வழிமறித்து தாக்கி வருகின்றனர்.

அதனால் அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்து வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதிகளால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இரு பகுதியினரையும் அழைத்துச் சென்ற பொலிஸார் வரும்வரை வழிவிடமுடியாது என்று தெரிவித்து வீதியை மறித்து போக்குவரத்தை இடை நிறுத்திவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தானின் பிரதி நிதிகளும் பேருந்து நிலையத்திற்குச் சென்று அரச தனியார் பேருந்து சாரதிகளுடன் கலந்துரையாடினார்கள்.

இதனிடையே பொலிஸாருடன் இடம்பெற்ற பேச்சுக்களில் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், வர்த்தகர் சங்கம் தனியார் அரச பேருந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முன்னைய நடைமுறையினை ஒரு சுமூகமான சூழ்நிலை உருவாகும் வரை பின்பற்றுமாறு பொலிஸார் அரச பேருந்து நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வர்த்தகர் சங்கத்தினால் மூடப்பட்ட வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வர்த்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச பேருந்துகள் தமது சேவையினை மேற்கொள்ளமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் தமது கடமைகளை ஆரம்பித்த தனியார் பேருந்துகள் முன்னைய நடைமுறையினை பின்பற்ற முடிவு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பிற்பகல் 12.30 மணியளவில் பதற்றமான சூழ்நிலை அகன்று வருகின்றது. எனினும் பெருமளவானவர்கள் இரு பகுதியிலும் காணக்கூடியதாகவுள்ளது.

பொலிஸார் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரச பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு ஒலி பெருக்கியில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.