மார்ச் மாத இறுதி வரை மழை இல்லை : வறட்சியினால் மின்சாரத்திற்கும் தட்டுப்பாடு!!

302

மார்ச் மாத இறுதி வரை போதுமான மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

தொடரும் வறட்சி குறித்து தெளிவுபடுத்துவதற்காக சில அரச நிறுவனங்கள் இணைந்து நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது, வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் ஓரளவு மழையை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டிற்கு முழுமையான தீர்வு கிடைக்காது என லலித் சந்திரபால மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வறட்சியினால் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக 60 மெகா வாட்ஸ் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய விலை மனு கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் அநுர விஜயபால குறிப்பிட்டார்.

எனினும், மின்சாரத்தை மக்கள் சிக்கனமாகப் பாவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், களுத்துறை மாவட்டத்தில் நீர் விநியோகத்தில் பிரச்சினை இருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் அலாவுதீன் அன்சார் தெரிவித்தார்.

கடல் நீர் ஆற்றில் கலப்பதாலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளதென சுட்டிக்காட்டிய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர், அந்த நீரை சுத்தப்படுத்தி மக்களுக்கு விநியோகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மாத்தறை மாவட்டத்தில் நிலவும் பிரச்சினை காரணமாக அங்கு1 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.