வித்தியா கொலை வழக்கில் எப்போது தீர்ப்பு?

213

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் பல வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் வெளியுலகத்திற்கு கொண்டு வரப்படுபவை ஒரு சில மாத்திரமே.

மற்றவைக்கு என்ன நடக்கின்றது, ஏன் வெளி கொண்டு வரப்படுவதில்லை, பெண்ணென்பவள் துணிச்சல் மிக்கவளாக இருக்க வேண்டும் என சிலர் வசனம் பேசுவார்கள்.

ஆனால் இவ்வாறு தனக்கு நடக்கும் வன்முறைகளையும், கொடுமைகளையும் வெளிக்கொணர முடியாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கும் காரணிகள் என்ன என்பது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.

அங்கு தான் எல்லோரும் தவறிழைக்கிறார்கள். எந்த பெண்ணுமே தன்னுடைய நலனை மாத்திரமே கருதி செயற்படுவதில்லை. குடும்பம், சமூகம், கௌரவம் இவை தான் வன்முறைகள் வெளிவராமல் இருப்பதற்கான முக்கிய காரணம்.

என்னதான் கலாச்சாரம் மாறியிருந்தாலும், நாகரீகம் வளர்ந்திருந்தாலும் உலகில் பெரும்பாலான பெண்கள் குடும்பம், சமூகம் மற்றும் கெளரவம் என்னும் வலைகளுக்குள் சிக்கி திணறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பல விழிப்புணர்வு கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அது மக்களை ஏமாற்றுவதற்கான போலி நாடகமாகவே காணப்படுகிறது. அந்தவகையில் அதிகளவில் பேசப்பட்ட ஒரு விடயமே சுவாதி கொலைச்சம்பவம்.

இந்த கொலைச்சம்பவத்திற்கான காரணகர்த்தா யார்? என தெரியவராத நிலையில், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் சிறைக்குள்ளேயே வைத்து தற்கொலை செய்துகொண்டாத தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இலங்கையில் பரவலாக பேசப்பட்ட, அனைவரது மனதினையும் உருக்கிய சம்பம் புங்குடு தீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலை வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 12ஆம் திகதி வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த மாணவி கொலை செய்யப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை.

குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீதிமன்றில் தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இது வரையிலும் அவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இந்த கொலை வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் விரைவாக அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அனைவரினது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டுமாயின், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்திருக்கின்றனர்.