போராட்டம் ஓயக்கூடாது : விஜய் சேதுபதி ஆவேசம்!!

295

ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வரை போராட்டம் ஓயக்கூடாது என்று மாணவர்களை சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இங்கு ஏராளமானவர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் கோசம் போட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி வந்தார். அவர் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது..

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டாக சங்க காலத்திலேயே அடையாளம் காட்டப்பட்டது ஜல்லிக்கட்டு. இந்த வீர விளையாட்டுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் பொங்கல் விழா களை இழந்து உள்ளது. இந்த தடை தமிழ் இனத்துக்கே செய்யும் துரோகம் ஆகும். தற்போது மாணவர்கள் ஒருங்கிணைந்து பாரம்பரியத்தை காக்க போராடுவது பாராட்டுக்குரியது.

ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்கும் வரை நமது போராட்டம் ஓயக்கூடாது. உங்களது போராட்டத்துக்கு நான் எப்போதும் துணை நிற்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

திண்டுக்கல் அருகே ஆத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கருப்பன் பட சூட்டிங் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற விஜய்சேதுபதி திடீரென மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.