தெற்கை ஆட்டிப்படைத்த கொலைக் கும்பல் சிக்கியது. ஐவருக்கு விளக்கமறியல். ஒருவர் தடுப்புக்காவலில்!!

341

அண்மையில் தெற்கை உலுக்கும் விதமாக அம்பலாங்கொடை மற்றும் மீட்டியாகொட பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் 6 பிரதான சந்தேகநபர்களை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய தீர்க்கப்படாத குற்றம் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளின் அடிப்படையிலேயே அப்பிரிவுக்கு உட்பட்ட அம்பலாங்கொடை பொலிஸ் குழுவினரால் இந்த திட்டமிட்ட கொலைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இவர்களைக் கைதுசெய்ததாகவும் அவர்களிட மிருந்து கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரீ 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட மூன்று துப்பாக்கிகளும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களையும் கொலைக்கு பயன்படுத் தப்பட்டதாக நம்பப்படும் கார் ஒன்றையும் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் களனி, மீட்டியாகொட மற்றும் ஹிக்கடுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் ஐவர் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் 48 மணி நேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2016.12. 05 ஆம் திகதி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடம்தொட்ட பகுதியில் வைத்து இளம் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அதே குடும்பத்தின் தூரத்து சொந்தம் என கருதப்படும் பழ வர்த்தகர் ஒருவர் 2016.12.12 அன்று மீட்டியாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அந் நகரத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இக்கொலைகள் தொடர்பில் பல்வேறு மட்ட விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கீழ் எல்பிட்டிய தீர்க்கப்படாத குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன் காரணமாகவே சந்தேகநபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்ப டுத்தப்படும் தோட்டாக்கள் ஆறும் மீட்கப்பட்டுள்ளன. இதனைவிட மைக்ரோ ரக கைத்துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தோட்டாவும் ரிவோல்வர் ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 5 தோட்டாக்களும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந் நிலையிலேயே கைதான அறுவரும் நேற்று பலப்பிட்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனர்.