நீர்த்தேக்கத்திற்குள் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை!!

324

சீனாவில், நீர்த்தேக்கம் ஒன்றைச் சீரமைக்கும் பணியின்போது 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அந்த நீர்த் தேக்கத்துக்கு பாரிய மின் கதவு ஒன்றைப் பொருத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக நீர்த்தேக்கத்தின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

முதற்கட்டமாக அங்கிருந்த நீரில் பத்து மீற்றர் அளவு குறைக்கப்பட்டது. நீரின் அளவு குறையக் குறைய புத்தர் சிலையொன்றின் தலைப்பகுதி தெரியத் தொடங்கியது. இதைக் கண்ட ஒரு கிராமவாசி அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினார். இதையடுத்து அந்த நீர்த்தேக்கத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர். அதில், இந்த புத்தர் சிலையுடன், கோவில் ஒன்றின் தளப் பகுதியையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த புத்தர் சிலை சுமார் பன்னிரண்டடி உயரம் கொண்டது. நீர்த்தேக்கம் அமைந்துள்ள பாறையின் உட்புறமாக, பாறையைக் குடைந்து இந்தச் சிலை செதுக்கப்பட்டுள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள இந்த புத்தர் சிலையானது சீனாவை ஆண்ட ‘மிங்’ வம்சத்தவர்களது காலப்பகுதியில் – அதாவது, கி.பி.1368-1644 காலப்பகுதியில் – வடிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அடியில் கோயில் தளம் ஒன்றும் காணப்படுவதால், அக்காலப் பகுதியில் இது ஒரு வழிபாட்டுத் தலமாக விளங்கியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.சீனாவில், நீருக்கு அடியில் இருந்து தோன்றியுள்ள இந்த புத்தர் சிலை தமது நாட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாக இருப்பதாக அந்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த நீர்த்தேக்கத்துக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து போக ஆரம்பித்துள்ளனர்.