ஜல்லிக்கட்டுக்கு உலகவாழ் தமிழர்கள் ஆதரவு : மெரினாவில் எழுச்சிப் போராட்டம் தொடர்கின்றது!!

303

 
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டுமென தமிழகத்தில் நடத்தப்பட்டுவரும் எழுச்சிப் போராட்டங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

வயது வேறுபாடின்றி தமிழர் எனும் அடையாளத்துடன் சென்னை மெரினாவில் இலட்சக்கணக்கானோர் தொடர்ந்தும் உணர்வுப்பூர்வமாக திரண்டுள்ளனர்.

இதேவேளை, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. தடையை மீறி தமிழகத்தின் சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்ட வரைபு நாளை அல்லது நாளை மறுநாள் பிறப்பிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்ட வரைபு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

தமிழர் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டுமென,சென்னை மெரீனா கடற்கரையில் ஒன்று திரண்டுள்ளபல்லாயிரக்கணக்கானோர் கோரி வருகின்றனர்.

ஐந்தாவது நாளாகவும் மெரினாவில் திரண்டுள்ளவர்களுக்கு, பல்வேறு தரப்பினரும் உணவு, குடிநீர் போன்றவற்றை வழங்கி ஆதரவளித்து வருகின்றனர்.

இதேவேளை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய மெளனப் போராட்டம் நேற்று மாலை நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி உலகவாழ் தமிழர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் நடத்தப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில், வவுனியா பழைய பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.