ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு குரல் கொடுத்த காவல் அதிகாரிக்கு 30 ஆயிரம் சம்பளத்தில் வேலை!!

336

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பேசிய காவல் துறை அதிகாரியை அரசு வேலையை வீட்டு நீக்கினால், அவருக்கு உயர் சம்பளத்தில் வேலை தருவதாக ஒரு தனியார் மேலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக்த்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இதன் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கிறது.

இந்நிலையில் இன்று நான்காவது நாள் போராட்டத்தை சென்னை மெரினாவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தொடங்கினர்.
இந்த போராட்டத்திற்கு தமிழக காவல் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவர்கள் போராடுபவர்களுக்கு தண்ணீர் வழங்குதல் மற்றும் உணவு வழங்குதல் போன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் போது பாதுகாப்புக்கு வந்த காவலர் மதியழகன் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அவர் இது ஒரு துவக்கம்தான். இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை. காவல் துறையில் இருக்கும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது.

இந்த மண்ணில்தான் நேதாஜியும் பிறந்தார். காந்தியும் பிறந்தார். காந்தி பிறந்த மண்ணு என்று ஓட்டு கேட்க வந்த மோடிக்கு அப்போது தெரியவில்லையா? விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.

தமிழனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்.என் சொந்த ஊர் மதுரை. ராமநாதபுரம்தான் என்னுடைய பூர்வீகம்.

தமிழ்நாட்டில் இல்லாமல் நாங்கள் எங்கு பஞ்சம் பிழைக்க செல்வது. நாங்கள் அமெரிக்காவா செல்ல முடியும். ஜல்லிக்கட்டு வெற்றி பெறும். இனி அடுத்தது மண் கொள்ளையை நாம் தடுக்க வேண்டும் என்றார்,

மேலும், இப்படி பேசியதால் என் வேலை போனாலும் பரவாயில்லை எனவும் அவர் தெரிவித்தார்.அவரின் பேச்சு பரபரப்பையும் பலத்த வரவேற்பையும் பெற்றது.

ஒரு காவல்துறை அதிகாரி எந்த போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது. எனவே, அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என போலீஸ் உயர் அதிகாரிகள் கூறிவிட்டனர்.

இந்நிலையில், மெரினாவில் பேசிய காவல்துறை நண்பனுக்கு வேலை போனால், அவருக்கு ரூ. 30 ஆயிரம் சம்பளத்தில் நான் வேலை தருகிறேன் என மதுரை தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் அறிவித்துள்ளார். இந்த தகவல் சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.