அரசாங்கத்திற்கு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவை அவர்கள் சரியாகப் பயன்படுத்த வில்லை : சிவசக்தி ஆனந்தன்!!

238

இந்த அரசாங்கத்திற்கு நாம் வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவை அவர்கள் சரியாக பயன்படுத்த வில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது உடகவியலாளர் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் புதிய ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. இந்த இரண்டு வருடத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உங்களது கருத்து என்ன என கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு பதிலளித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

யுத்தத்திற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே வாக்களித்து இருந்தார்கள். துரதிஸ்டவசமாக 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா தோல்வியடைந்தார். சர்வதேச சமூகமும் மஹிந்த ஏதாவது செய்வார் என நம்பி இருந்த தருணம் அது. ஆனால் மஹிந்த போரின் போது தனக்கு உதவி வழங்கிய நாடுகளை கைவிட்டு தன்னை ஒரு இடதுசாரியாக காட்டிக் கொண்டு சீனா, கியூபா, ரஸ்யா போன்ற நாடுகளை கையில் வைத்துக் கொண்டு அமெரிக்காவையும், ஐநாவையும் ஏமாற்ற முற்பட்டதன் விளைவு அவர்களது கோபத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல் கட்சிகளை பெரியளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும், மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக அவர்கள் சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சர்வதேச சமூகம் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளையும் ஒரே இடத்திற்கு கொண்டு வந்து மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தது. தமிழ் மக்களும் சர்வதேச சமூகத்தையே நம்பியிருந்தனர். சர்வதேசத்தின் உடைய ஆதரவு தமிழ் மக்களுக்கு தேவையாக இருந்ததால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆட்சி மாற்றத்திற்கு நிபந்தனையற்ற வகையில் பூரண ஆதரவு வழங்கியது. அதன் விளைவாகவே நல்லாட்சி அரசாங்கம் என்னும் பெயரில் ஒரு கூட்டு அரசாங்கம் உருவானது.

இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பாரியளவிலானது. இந்த நிபந்தனையற்ற எமது ஆதவை அரசாங்கம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன்.

குறிப்பாக ஆட்சி மாற்றம் நடைபெற்ற உடனடியாகவே நூறு நாள் வேலைத்திட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் பல பிரச்சனைகள் அவ்வாறே உள்ளன. தமிழ் அரசியல் கைதிகளாக தடுத்து வைத்திருப்போரைக் கூட ஒரு நல்லெண்ண அடிப்படையில் இந்த அரசாங்கம் விடுவிக்கவில்லை.

காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் இதுவரை உரிய பதிலை வழங்கவில்லை. காணி விடுவிப்பு பற்றி பார்க்கும் போது அங்கொன்றும், இங்கொன்றுமாக சில காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் அது முழுமையாக நடைபெறவில்லை. புதிய காணி சுவீகரிப்புக்கள் கூட இடம்பெற்றிருக்கின்றது.

சிங்கள குடியேற்றங்கள், புத்தர் சிலைகள் நிறுவுதல் என்பன முன்னைய ஆட்சியைப் போல தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இவற்றுக்கு எதிராக நாம் கொடுக்கும் குரல்கள் அனைத்தும் விளலுக்கு இழைத்த நீராகவே இருக்கிறது. ஆகவே இரண்டு வருடங்களில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாரிய நன்மைகள் எதுவும் கிடைத்ததாக இல்லை எனத் தெரிவித்தார்.