வவுனியாவில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவர் கைது!!

430

 
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா, ஓமந்தை, பெரியமடு பகுதியில் பெறுமதியான முதிரை மரங்களை வெட்டிய இருவர் ஓமந்தை பகுதி வனவளபாதுகாப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 18 முதிரை மரக்குற்றிகள், மரம் வெட்டும் இயந்திரம், கோடரி என்பன கைப்பற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த இரு நபர்களையும் வவுனியா நீதிபதியின் முன் முன்னிலைப்படுத்திய போதே அவர்கள் இருவருக்கும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

48 மற்றும் 27 வயதுடைய புளியங்குளம், பனிக்கநீராவி மற்றும் ஓமந்தை, பெரியமடு பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 27 வயதுடைய நபர் மீது மரக்கடத்தல் தொடர்பில் கனராயன்குளம் பொலிஸ் நிலையத்திலும் முன்னர் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இச் சட்டவிரோத மரம் வெட்டும் நடவடிக்கையை ஓமந்தை, பெரியமடு பகுதி விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஐ.பி ரஞ்சன தலைமையிலான குழுவினரும் மற்றும் ஓமந்தை பகுதி வனவளபாதுகாப்பு பிரிவியைச் சேர்ந்த ரி.வி.சமன்பிரியந்த, எல்.என்.ஏ.நுவன்சமீர, லைஜீரு உதார உள்ளிட்ட குழுவினரே முறியடித்திருந்தனர்.