122 MLA ஆதரவுடன் தப்பித்தது எடப்பாடி தலைமையிலான அரசு : நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!!

488

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.

122 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளதால் பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அரசை தக்கவைத்து கொண்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

சபாநாயகர் தனபால் தலையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில், பழனிச்சாமி அணியினருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை நிரூபிக்க ரகசிய ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்த திமுக, காங்கிரஸ் மற்றும் பன்னீர்செல்வம் அணி உள்ளிட்டோரும் சட்டப்பேரவையில் வலியுறுத்தின.

இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. மேலும் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். வேறொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் மக்களிடம் கருத்து கேட்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தினர். இதனால் சட்டப்பேரவையில் ஒரு மணி நேரமாக கூச்சல் குழப்பம் நிலவியது. மேலும் சட்டப்பேரவையில் நாற்காலிகளை தூக்கி எறிந்து ரகளையில் எதிர்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

மைக்குகள் பிடுங்கப்பட்டதால் சட்டப்பேரவை போர்க்களமானது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சபாநாயகர் பேரவையை விட்டு வெளியேறினார். இதனால் தமிழக சட்டப்பேரவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடும் அமளிக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியதும் தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஸ்டாலின் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சட்டப்பேரவை காவலர்கள் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் குண்டுகட்டாக அவை காவலர்கள் வெளியேற்றினர்.

திமுகவினர் வெளியேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து 3 மணிக்கு அவை மீண்டும் தொடங்கிய போது எதிர்கட்சிகள் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக செம்மலை, நட்ராஜ் உள்ளிட்ட பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் வாக்களித்தனர். அதே போல் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.