உலகின் முதல் திருநங்கை பொம்மை நாளை முதல் விற்பனையில்!!

436

உலகின் முதல் திருநங்கை பொம்மைகள் நியூயோர்க் விளையாட்டுப்பொருள் கண்காட்சியில் இன்று வெளியாகவிருக்கின்றன. கிங்ஸ்டனில் உள்ள டொன்னர் பொம்மை நிறுவனம் இந்த பொம்மைகளைத் தயாரித்துள்ளது.

அமெரிக்காவின் ஓரினச்சேர்க்கை மற்றும் இருபால் உறவு ஆதரவுக் கழகத்தின் பேச்சாளருமான ஜாஸ் ஜென்னிங்ஸ் இந்த பொம்மையை வடிவமைத்திருக்கிறார்.

பதினாறு வயதேயான ஜென்னிங்ஸ், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறி, அமெரிக்காவின் மிக இளவயது திருநங்கையாகத் தன்னைப் பதிவுசெய்துகொண்டவர். இதனால், அமெரிக்கா முழுவதும் இவர் புகழ்பெற்றிருக்கிறார். இந்த பொம்மையைத் தயாரித்து வெளியிடுவதன் மூலம், திருநங்கையாக இருப்பது தொடர்பான நேர்மறைச் சிந்தனைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்று நம்புவதாக இவர் தெரிவித்துள்ளார்.

“சிறுவயது முதலே – அதாவது நான் ஆணாக இருந்தபோதே பொம்மைகளுடன் விளையாடுவதை விரும்பினேன். இதன் மூலம் என் பெற்றோருக்கு என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்றே நம்புகிறேன். இது என்னுடைய பயணத்திற்கான தருணம் என்றே கருதுகிறேன்” என்று ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார்.

திருநங்கை பொம்மையை வடிவமைத்தமைக்காக டொன்னர் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ரொபர்ட் டொன்னர், ஜென்னிங்ஸைப் பாராட்டியிருக்கிறார். காலோசிதமான சிந்தனையும், துணிச்சலும், படைப்புத்திறனும் கொண்ட ஜென்னிங்ஸ், இந்த பொம்மையை வடிவமைக்கும் கற்பனையைச் செயற்படுத்தியிருப்பது அவர் மீதான மரியாதையை அதிகரித்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.