தாய்லாந்தில் கரையொதுங்கிய விசித்திர கடல்வாழ் உயிரினம்!!

583

 
மயிர்கள் நிறைந்த மாபெரும் விசித்திர கடல்வாழ் உயிரினம் ஒன்று தாய்லாந்துக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இதைக் காண பெருமளவு எண்ணிக்கையிலான மக்கள் தாய்லாந்தின் தினாகத் தீவின் கக்டய்னோ கடற்கரைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

கடந்த ஞாயிறன்று, தாய்லாந்துக்கு அருகாமையில் உள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தையடுத்து வெவ்வேறு வகையான உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தாய்லாந்துக் கடற்கரைகளில் கரையொதுங்கிவருகின்றன.

சுமார் 20 அடி நீளமும், 2,000 கிலோ எடையும் கொண்ட வெள்ளை நிறத்தினாலான இந்த விசித்திர மிருகமும் இதே காரணத்தினாலேயே கரையொதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, 1924ம் ஆண்டும் இதேபோன்றதொரு உயிரினம் தென்னாபிரிக்கக் கடற்கரையொன்றில் கரையொதுங்கியதாகவும், அது திமிங்கிலம் மற்றும் துருவக் கரடியின் இணை உயிரியாகக் கருதப்பட்டதென்றும், அதற்கு ‘ட்ரங்க்கோ’ என்று பெயரிடப்பட்டதாகவும், இதுவும் ட்ரங்கோவின் வழி வந்த உயிரினமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது ஒரு திமிங்கிலமாக இருக்கலாம் என்றும் கப்பலில் மோதி உயிரிழந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியிருப்பதனால் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்திருக்கலாம் என்றும் கடல்வாழ் உயிரின விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.