68 கிலோ எடை.. 60 ஆயிரம் விலை.. 120 கி.மீ. வேகம்.. வானில் பறக்கிறது, கிராமத்து விவசாயியின் சூப்பர் பாராகிளைடர்

1066

வானத்தில் பறந்தபடி இயற்கை காட்சிகளை ரசித்து வட்டமிட வைக்கும் பாராகிளைடரை, தொழில்நுட்ப படிப்புகள் எதுவும் படிக்காமலேயே உருவாக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார், ராஜா ஞானபிரகாசம் என்ற கிராமத்து விஞ்ஞானி.

38 வயதான இவருடைய பூர்வீகம் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கடத்தூர் கிராமம். 8–ம் வகுப்புடன் பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தபோதும் கல்வி அறிவை கூர்தீட்டிக்கொண்டே இருந் திருக்கிறார். பின்பு தொலைதூர கல்வி மூலம் எம்.ஏ. வரை படித்திருக்கிறார்.

வானில் பறக்க வேண்டும் என்பது, ராஜா ஞானபிரகாசத்திற்கு சிறு வயதில் துளிர்த்த மாபெரும் கனவு. தனது கனவை நனவாக்க பாராகிளைடரை சொந்தமாகவே உருவாக்குவதற்கு முயற்சி எடுத்திருக்கிறார். அதற்கு செயல்வடிவம் கொடுக்க களத்தில் இறங்கியவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். விடா முயற்சியால் வானத்தையே தன்வசப்படுத்திய ராஜா ஞானபிரகாசம், தான் உருவாக்கிய பாராகிளைடரில் வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தார். அவரை சந்தித்து பேசினோம்.

பாராகிளைடரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன், எப்போது ஏற்பட்டது?

‘‘நான் சிறுவனாக இருந்தபோது, வானில் பறக்கும் விமானங்களை கண்டு ஆச்சரியப்படுவேன். அப்போதே ‘வானில் விமானம் எப்படி பறக்கிறது?’ என்ற கேள்வியை எனக்குள் எழுப்பி, விடைதேடினேன். முதலில் பட்டங்களை பறக்கவிட்டுப் பார்த்தேன். பின்பு விமானத்தை போல வானில் பறக்கவிடும் நோக்கில் தார்ப்பாய் மற்றும் துணிகளை கொண்டு ராட்சத பட்டம் ஒன்றை தயார் செய்தேன். அதில் ஏறி வானில் பறக்க முயற்சித்தேன். அது தோல்வியில் முடிந்தது. கடும் முயற்சிக்கு பிறகு எங்களுடைய தோட்டத்து கிணற்றின் ஒரு மூலையில் ராட்சத பட்டத்தில் ஏறி நின்று கொண்டு எதிர்முனைக்கு தாவி பயிற்சி எடுத்தேன். அதுதான் என்னுடைய கடின முயற்சிக்கு கிடைத்த முதல் பரிசு. அது கொடுத்த ஊக்கம் பாராகிளைடரில் பறக்க வேண்டும் என்ற ஆசையை துளிர்விட செய்தது. ராட்சத பட்டத்தை போல பாராகிளைடரையும் நானே தயார் செய்து அதில்தான் பறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதுவே என் லட்சியமாக மாறியது.

உங்களுடைய லட்சியத்தில் வெற்றி பெற எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதிருந்தது?

‘‘13 ஆண்டுகளுக்கு முன்பு பாராகிளைடரை தயாரிக்கும் முயற்சியில் களம் இறங்கினேன். அதனை வடிவமைப்பதற்கான சில நுணுக்கங்களை, நான் வேலைக்கு சென்ற தொழிற்கூடங் களில் கற்றேன். இணையதளங்கள் மூலமாகவும் ஏராளமான தகவல்களை திரட்டினேன். பொறியியல் படிப்பு சார்ந்த புத்தகங் களையும் படித்து பாராகிளைடர் தயாரிப்பு முறை, இயங்கும் விதம் பற்றி அறிந்து கொண்டேன். நண்பர்களும் எனக்கு உதவியாக இருந்தனர்.

பாராகிளைடரை தயாரிக்க தேவையான உதிரிபாகங்கள் எப்படி கிடைத்தது?

‘‘பழனி, கோவை போன்ற இடங்களுக்கு சென்று பாராகிளைடர் தயாரிக்க தேவையான உபகரணங்களை ஒவ்வொன்றாக வாங்கினேன். ஆனால் பாராசூட் மட்டும் கிடைக்கவில்லை. அதை பெங்களூருவுக்கு சென்று வாங்கி வந்தேன். வெளிநாடுகளில் பாராகிளைடர் தயாரிக்க ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவிடுகிறார்கள். எனக்கு ரூ.60 ஆயிரமே செலவானது. குறைவான செலவில் மிகவும் பாதுகாப்பான பாராகிளைடரை உருவாக்கி இருக்கிறேன்’’

உங்களுக்கு முதல் வெற்றி எப்போது கிடைத்தது?

‘‘2015–ம் ஆண்டு முதல் பாராகிளைடரை உருவாக்கினேன். மே மாதம் 15–ந்தேதி அதனை வானில் பறக்க விட்டு சோதனை செய்து பார்த்தேன். அது வெற்றிகரமாக பறந்தது. அப்பொழுது சுமார் 60 அடி உயரம் வரை அதில் பயணம் செய்து பத்திரமாக தரை இறங்கினேன். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததால் அன்றைய பொழுது மிகவும் மகிழ்ச்சியானதாகவும், உணர்ச்சிகரமானதாகவும் இருந்தது. பலரும் என்னை பாராட்டினார்கள்’’

நீங்கள் இதுவரை எத்தனை பாராகிளைடர்களை உருவாக்கி இருக்கிறீர்கள்?

‘‘200 சிசி, 230 சிசி, 270 சிசி, 310 சிசி என வெவ்வேறு எந்திர திறன்கொண்ட 4 வகையான பாரா கிளைடர்களை உருவாக்கி வைத்திருக்கிறேன். இதில் இறுதியாக தயாரித்த 310 சிசி திறன் கொண்ட பாராகிளைடர் மூலம் எவ்வளவு தூரம், எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் பறந்து செல்லலாம். மணிக்கு அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கலாம். அதில் உயரம், தூரத்தை கணக்கிடும் கருவிகளை பொருத்தி இருக்கிறேன். பெட்ரோல் டேங்க் 14½ லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதன்மூலம் 4½ மணி நேரம் இடைவிடாமல் பயணம் செய்ய முடியும். அதிகபட்சமாக 2 பேர் பயணிக்கலாம். நான் தயாரித்து இருக்கும் பாராகிளைடர் 68 கிலோ எடை கொண்டதாகும்’’

பாராகிளைடர் இயக்கும் முறை, பாதுகாப்பு பற்றி…?

‘‘பாராகிளைடரை காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் இருந்து சிறிது தூரம் தள்ளி செல்ல வேண்டும். அப்போது, எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் பாராசூட் விரிவடையும். பிறகு மேலே பறக்க தொடங்கும். அதில் கட்டுப்பாட்டு கருவிகளையும் பொருத்தி இருக்கிறேன். இதனால் நாம் பயணிக்க விரும்பும் திசையை நாமே தேர்வு செய்யலாம். திடீரென ஏதாவது கோளாறு ஏற்பட்டு அந்தரத்தில் எஞ்சின் பழுதடைந்து நின்றாலும், பத்திரமாக பாராசூட் மூலம்  தரை இறங்கலாம். அந்த அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைத்திருக்கிறேன். இதனை தரையில் இருந்து வானில் பறக்க, இயக்குவதற்கு 30 மீட்டர் தூரம் இட வசதி இருந்தால் போதும். நண்பர்கள் உதவியுடன் சிறிது தூரம் தள்ளி சென்று இயக்குகிறேன். பாராகிளைடரை பலமான காற்று வீசும் காலங்களிலும், மழைக்காலங்களிலும் பயன்படுத்த முடியாது’’

உங்கள் முயற்சிகளில் ஏற்பட்ட தோல்விகள்?

‘‘சிறு வயதில் இருந்தே ஏராளமான தோல்விகளை கடந்து வந்திருக்கிறேன். தோல்விகள்தான் எனக்கு பாடங்களை கற்றுக்கொடுத்து பாராகிளைடர் முழுவடிவம் பெறுவதற்கு உந்துசக்தியாக இருந்திருக்கிறது. அதனை தயாரித்து வானில் பறக்க வைக்க முயற்சித்தபோதும் தோல்விகள்தான் தொடர்கதையானது. முதலில் ஏதாவது தொழில்நுட்ப தவறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. அதனை கண்டுபிடித்து திருத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவேன். ஏராளமான தோல்விகளை எதிர்கொண்டபோதிலும், துவண்டுபோனதில்லை. பெற்றோரும், உறவினர்களும் உற்சாகமூட்டினார்கள். பழனி வயலூரை சேர்ந்த சாத்தப்பன், கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்தனர். சாத்தப்பனின் ‘லேத்’ பட்டறையில் நேரம் காலம் பாராமல் பாராகிளைடர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். அதுவும் எனது வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியது’’

இதுவரை எத்தனை முறை பாராகிளைடரில் பறந்து இருக்கிறீர்கள்?

‘‘நான் 25 தடவைக்கு மேல் பாராகிளைடரில் பறந்திருக்கிறேன். மரங்கள், இயற்கை காட்சிகள், குடியிருப்புகளுக்கு மேலே வானில் பறந்து வட்டமடிக்கும்போது சொர்க்கத்தில் பயணிப்பதாகவே எண்ணுவேன். அப்போது, ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. நான் வானில் பறப்பதை கிராம மக்கள் ஆச்சரியமாக பார்ப்பார்கள்’’

பாராகிளைடரில் பறக்க அனுமதி பெற வேண்டுமா?

‘‘பாராசூட்,பாரா கிளைடர் போன்றவற்றில் குறிப்பிட்ட உயரம் வரை மட்டுமே பறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நான் அதிகபட்சமாக 500 மீட்டர் உயரத்தில் பறப்பேன். நான் பாராகிளைடர் தயாரித்து வானில் பறப்பதை அறிந்த போலீசார் என்னிடம் விசாரித்தனர். அதன்பிறகு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்பதற்கான சான்று வாங்கினேன். மற்றபடி இதை பயன்படுத்த சிறப்பு அனுமதி பெற வேண்டியதில்லை. பள்ளிகளில் என்னை மாணவர்களோடு உரையாற்ற அழைக்கிறார்கள். நான் மாணவர்களிடம் பாராகிளைடரை இயக்கி காண்பித்துள்ளேன். அதன் செயல்முறை, உருவாக்கும் முறை பற்றியும் விளக்குகிறேன். மாணவர்கள் ஆர்வமாக கவனிக் கிறார்கள். தொடர்ந்து, மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து நான் சந்தித்த சோதனைகள், போராட்டங்களை எடுத்துக்கூறி அவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி கொடுத்து ஊக்குவிப்பேன். விடா முயற்சி விஸ்வரூப வெற்றியை தரும். தோல்விகளை கண்டு துவண்டுவிடக்கூடாது. சோதனைகளை கண்டு சோர்ந்துபோக கூடாது. இலக்கை அடையும் வரை ஓய்ந்துவிடக்கூடாது. இவற்றைதான் இளைஞர்கள் வெற்றியின் தாரக மந்திரமாக கருத வேண்டும்’’

உங்களுடைய அடுத்த கட்ட முயற்சி?

‘‘நான் பாராகிளைடரை உருவாக்கி, இயக்கியதோடு திருப்தி அடைந்திடவில்லை. எனக்குள், ஹேண்ட்கிளைடர் விமானம் (இறக்கை உடைய சிறிய விமானம்) தயாரிக்கும் எண்ணம் உருவாகி உள்ளது. தற்போது, அதற்கான முயற்சிகளில் களம் இறங்கி உள்ளேன். இதிலும் வெற்றி காண்பேன். இந்த விமானத்தை பயன் படுத்த விமான போக்குவரத்து ஆணையம் போன்ற சில துறைகளிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். அவற்றை பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். விதிமுறைகளுக்கு உட்பட்டு அதை பயன்படுத்துவேன்’’ என்றார், இந்த கிராமத்து விஞ்ஞானி.

விவசாய குடும்பத்தை சேர்ந்த ராஜா ஞானபிரகாசத்தின் பெற்றோர் அருட்பிரகாசம்–முத்துலட்சுமி. தந்தையோடு சேர்ந்து விவசாய பணிகளையும் கவனிக்கும் இவர், ஆழ்குழாய்கள் அமைக்கும் பணிகளையும் செய்து வருகிறார்.