காதலிக்கு காதலர் அளித்த 33 தொன் பரிசு!!

493


முப்பத்து மூன்று தொன்கள் எடையுள்ள விண்கல்லைப் பரிசளித்து பெண் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம் பெற்ற ருசிகரச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.



லியு என்பவர் பெண் ஒருவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தார். அவரை மணந்துகொள்ள விரும்பிய லியு, குறித்த பெண்ணின் சம்மதத்தைப் பெற வித்தியாசமான முறையில் முயற்சி செய்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு தன் காதலியுடன் ஸிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்க்கி என்ற ஊருக்கு சுற்றுலாச் சென்றிருந்தார். அப்போது, பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் விழுந்திருந்த பாரிய விண்கல்லையும் அவர்கள் இருவரும் பார்வையிட்டனர். அந்த விண்கல்லைக் கண்டு லியுவின் காதலி பிரமித்துப் போனார்.



இதை ஞாபகம் வைத்திருந்த லியு, தனது காதலிக்குத் தெரியாமலேயே அந்தக் கல்லை பத்து இலட்சம் யுவானுக்கு (ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் டொலர்) விலைபேசி வாங்கினார். பின், நேற்று (14) தனது காதலியை உரும்கிக்கு அழைத்துச் சென்ற லியு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பெரிய பூங்கொத்து ஒன்றைக் கொடுத்து தன் காதலியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்டார்.



இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன அவரது காதலி, உடனடியாகத் தனது சம்தத்தைத் தெரிவித்தார். மேலும், “லியுவின் இந்த ஏற்பாடு என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. ஒரு வருடத்துக்கு முன் நான் சொன்னதை ஞாபகம் வைத்து, மறக்க முடியாத பரிசை எனக்குத் தந்திருக்கிறார். என் வாழ்நாளில் இதுபோன்ற பிரமாண்டமான விண்கல்லை நான் பார்த்ததேயில்லை. இப்போது இந்தக் கல் எனக்கே சொந்தம் எனும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குதூகலித்தார் அந்தப் பெண்!


எனினும், விண்கல் என்பது பொதுச் சொத்து, அதை யாரும் விற்கவும் முடியாது வாங்கவும் முடியாது, இது ஒரு பொய்ச் செய்தி என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.