இரவில் ஒளிரும் பச்சைத்தவளை ஆஜென்டினாவில் கண்டுபிடிப்பு!!

335

இரவு நேரங்களில் ஔிரும் புதிய வகை பச்சைத்தவளை இனம் அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பகற்பொழுதுகளில் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் தவளை தென்படுகிறது. ஆனால், இரவு நேரங்களில் அதன் கண்களும், உடலில் உள்ள புள்ளிகளும் அடர் நீல நிறத்திலும் மற்ற பகுதிகள் புளோரசென்ட் பச்சை வண்ணத்திலும் மின்னுகின்றன.

குறுகிய அலை நீளம் கொண்ட ஒளியை உறிஞ்சி, பின்னர் நீண்ட அலை நீளத்தில் ஒளியை உமிழ்வது புளோரசென்ட்டின் இயல்பு. அந்த இயல்பு இந்த அரிய வகை தவளையிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பவளப்பாறைகள், மீன், சுறாக்கள், கடல் ஆமை போன்ற பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களிடத்திலும், நிலத்தில் வாழும் சில வகை கிளிகள் மற்றும் தேள்களிடம் மட்டுமே புளோரசென்ட் இயல்பு இருந்தது முன்பு அறியப்பட்டது.

தற்போது தவளையிடமும் அந்த இயல்பு இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மனிதனைத் தவிர, பிற உயிரினங்களுக்கு இந்த இயல்பு ஏன் இருக்கிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். எனினும், பாலின ஈர்ப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தென் அமெரிக்க நாடான சூரி நாமில் ஏற்கனவே ஊதா நிறத்துடன் மின்னும் தவளை 2006 ஆம் ஆண்டு மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.