சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் : பாஹுபலிக்கு தடை?

271

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பாஹுபலி 2 திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி கர்னாடக இயக்கம் ஒன்று போராட்டத்தில் இறங்கியுள்ளது.

படத்தில் கட்டப்பா என்ற வேடமேற்றிருக்கும் சத்யராஜ், கன்னடர்களை இழிவாகப் பேசியற்கு மன்னிப்புக் கோரி கடிதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவதாகவும் கர்னாடக ரக்ஷன வேதிகே என்ற அந்த அமைப்பு கூறியுள்ளது.

பாஹுபலி 2வின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இதை, கர்னாடகாவில் உள்ள திரையரங்கு ஒன்றும் வெளியிட முயற்சித்தது. அப்போது அங்கு வந்த மேற்படி அமைப்பின் உறுப்பினர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

காவிரிப் பிரச்சினையில் கன்னடாவை கன்னாபின்னாவென்று திட்டிய சத்யராஜ் நடித்திருக்கும் திரைப்படத்தை கர்னாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். தம்மைத் தரக் குறைவாகப் பேசிய சத்யராஜ், தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தாலன்றி படத்தை வெளியிடவே முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அந்த இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டபோதும், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பொலிஸாரால் எதுவும் செய்ய முடியாமல் போனது. இதையடுத்து பாஹுபலி 2 முன்னோட்டத்தைத் திரையிடுவதை குறித்த திரையரங்க உரிமையாளர் ஒத்திவைத்தார். இதையடுத்து கர்நாடகாவில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட மறுத்த கர்நாடகத்தை கண்டித்து தமிழ் சினிமாத் துறையினர் ஒன்றுகூடி ஒரு நாள் போராட்டம் நடத்தினர். இதில், சத்யராஜ் கர்னாடகா பற்றி கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார். எனினும், இச்சம்பவம் இடம்பெற்றது 2008ஆம் ஆண்டு.

பாஹுபலி முதலாவது பாகம் 2015ஆம் ஆண்டு வெளியானபோது சத்யராஜ் குறித்த சர்ச்சை எதுவும் எழுந்திருக்கவில்லை. இந்நிலையில், அரசியல் லாபம் தேட முயலும் சிலரே இப்போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கர்னாடகாவில் பாஹுபலி 2 படத்தை எளிதாக வெளியிட்டுவிடுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவே தெரியவருகிறது.