கேலிக்குள்ளான சிறுமிக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்காக தனது சிகையலங்காரத்தை மாற்றிக்கொண்ட ஆசிரியை!!

243

பிரேஸிலைச் சேர்ந்த பாடசாலை மாணவியான ஒரு சிறுமியின் தலைமயிர் குறித்து சிலர் கேலி செய்ததால், அம் மாணவிக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்காக அச் சிறுமியைப் போன்று ஆசிரியை ஒருவரும் சிகையலங்காரம் செய்துகொண்டுள்ளார்.

பிரேஸிலின் சாவோ பவ்லோ நகரைச் சேர்ந்த அனா பார்பரா ஃபெரைரா எனும் இந்த ஆசிரியை தனது புதிய சிகையலங்காரத்துடன் மேற்படி மாணவியின் அருகிலிருந்து பிடித்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேற்படி மாணவியின் தலைமயிர் அசிங்கமாக உள்ளது என மாணவன் ஒருவன் கூறியதால் அம் மாணவி மிகவும் கவலை யடைந்திருந்ததாக ஆசிரியை அனா பார்பரா ஃபெரைரா தெரிவித்துள்ளார்.

“அம் மாணவி அழகாக இருக்கிறாள். சிலர் கூறுவதைப் பற்றி கவலையடைய வேண்டியதில்லை என்பதை மாத்திரமே அத் தருணத்தில் என்னால் கூற முடியும்” என பேஸ்புக்கில் அவர் எழுதியுள்ளார்.

ஆனால், வெறும் வார்த்தைகளால் மாத்திரம் அம் மாணவிக்கு ஆசிரியை அனா பார்பரா ஆறுதல் கூறவில்லை. மறுநாள் அச் சிறுமி பாடசாலைக்கு வந்தபோது தனது ஆசிரியை அனா பார்பராவும் தன்னைப் போன்ற சிகையலங்காரம் செய்திருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தாள்.

“அவள் என்னைக் கண்டவுடன், ஓடி வந்து என்னை அணைத்துக்கொண்டாள். நான் அழகாக இருப்பதாக அவள் கூறினாள். அப்போது நான் உன்னைப் போல் அழகாக இருக்கிறேன்” என அவளிடம் கூறினேன்” என அனா பார்பரா ஃபெரைரா தெரிவித்துள்ளார்.