பன்றிகளுக்கு நீரூட்டியதால் வந்த வினை!!

422


இறைச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்ட பன்றிகளுக்கு நீரூட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட கனடியப் பெண்ணை நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



அனிதா கிராஞ்ஜ் ஒரு சமூகச் செயற்பாட்டாளர். கடந்த 2015ஆம் ஆண்டு, டொரன்டோ புற நகர்ப் பகுதியில் ட்ரக் ஒன்றில் சுமார் 190 பன்றிகள் இறைச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டன. வாகன நெரிசலில் அந்த ட்ரக் நின்றபோது, அனிதாவும் மேலும் சில ஆர்வலர்களும் போத்தல்கள் மூலம் பன்றிகளுக்கு நீரூட்டினார்.

இதை எதிர்த்த பன்றிகளின் உரிமையாளர், தனது சொத்துக்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகக் கூறி அனிதா மீது வழக்குத் தொடர்ந்தார். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது.



அதில் அனிதா செய்தது ஒரு மனிதாபிமானச் செயலே என்றும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உறுதிசெய்வதற்கு போதிய விளக்கங்கள் வாதி தரப்பில் வழங்கப்படவில்லை என்றும் கூறி நீதிபதி அனிதாவை விடுவித்தார்.



தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அனிதா, பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் சொத்துக்களாகக் கருதப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும், உயிருள்ள அவற்றுக்கான அடிப்படி உரிமைகள் பெற்றுத் தரப்பட வேண்டும் என்றும் கூறினார்.