சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் இறகுகள் கொண்ட டைனோசர் இனத்தைச் சேர்ந்தவை!!

665

சீனாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் குட்டிகளின் எலும்பு படிமங்கள், இறகுகள் கொண்ட புதிய டைனோசர் இனமாக கண்டறியப்பட்டுள்ளது.

‘பேபி லூயி’ என்று பெயர் சூட்டப்பட்ட, முட்டையிலிருந்து வந்த அந்த டைனோசர் குட்டி, டைனோசர் முட்டைகள் அடங்கிய கூட்டிற்குள் இருந்து எடுக்கப்பட்டது.

இந்த டைனோசர் குட்டி, ‘பெய்பெய்லாங் சினென்சிஸ்’ அதாவது சீனாவின் ‘பேபி டிராகன்’ என்று புதை படிமங்களின் நிபுணர்களால் அழைக்கப்படுகிறது.

இறகுகள் கொண்ட டைனோசர் இனத்தைச் சேர்ந்த பறவை போல் தோற்றமளிக்கும் பிரமாண்ட டைனோசர் இனத்தில் கண்டறியப்பட்ட முதல் படிமம் இதுவென தெரிவிக்கின்றனர்.

அந்த டைனோசரின் புதைபடிவம் சிறியதாக இருந்தாலும் அது 1,000 கிலோ எடை வரை வளர்ந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

சீனா, தென் கொரியா, மங்கோலியா மற்றும் வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட டைனோசரின் முட்டைகளின் படி பெய்பெய்லாங் இன டைனோசர்கள் சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1980களின் கடைசி பகுதி மற்றும் 1990களின் ஆரம்ப பகுதிகளில், உள்ளூர் விவசாயிகளால் ஹெனான் மற்றும் சீனாவில் உள்ள பாறைகளில் இருந்து ஆயிரக்கணக்கான டைனோசர் முட்டைகள் சேகரிக்கப்பட்டன.

அதில் மாதிரி படிமங்கள் உட்பட சில முட்டைகள் அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டன.

பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்பகுதிக்காக படம்பிடிக்கப்பட்ட பிறகு அந்த டைனோசர் குட்டியின் எலும்புக்கூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அது `பேபி லூயி` என்று அழைக்கப்பட்டது.

பிறகு அந்த புதைபடிமம் 2013 ஆம் ஆண்டு சீனாவிற்கு கொண்டு வரப்பட்டு தற்போது அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

முன்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட டைனோசர் இனத்துடன் இந்த படிமத்தை சீனா மற்றும் கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒப்பிட்டு இது ஒரு புதிய இனம் என்று கண்டறிந்துள்ளனர்.