குஜராத் வீரர்கள் அறையில் 41 லட்சம் பறிமுதல் : சூதாட்ட முயற்சி முறியடிப்பு!!

424

ஐ.பி.எல். தொடரின் போது ஆட்ட நிர்ணய சதி சூதாட்டம் நடைபெறுவதை தடுப்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஊழல் தடுப்புக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தக் குழு இந்தியாவில் உள்ள பெரிய சூதாட்ட தரகர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் வீரர்களை தொடர்பு கொள்கிறார்களா என்று கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது.

இந்தநிலையில் கான்பூரில் குஜராத் லயன்ஸ் அணி, டெல்லி அணி வீரர்கள் தங்கியிருந்த விருந்தகத்தில் அறை எடுத்து தங்கிய தொழிலதிபர் ரமேஷ் நாயன் ஷா உள்பட மூன்று பேரை உத்தர பிரதேச பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் உள்பட ஐந்து மொபைல் போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரண்டு குஜராத் லயன்ஸ் அணி வீரர்கள் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.  இதனால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த செய்தியை உறுதிச்செய்துள்ள பி.சி.சி.ஐ, உத்தர பிரதேச பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கு முன்பே, ஊழல் தடுப்புக்குழு அவர்களை கண்காணித்து வந்தது என்று தெரிவித்துள்ளது.

ரமேஷ் குமார் போட்டி நடைபெறும் மைதானத்தில் விளம்பர பேனர்கள் வைக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். அவர் வீரர்கள் தங்கிய ஹோட்டலில் ரமேஷ் நயன் ஷாவிற்கு அறை எடுத்து கொடுத்துள்ளார்.

ஷாவிற்கு அஜ்மீரில் உள்ள மோசடி மன்னனுக்கு தொடர்பு இருந்துள்ளது. ஷா மூலம் கிரிக்கெட் போட்டி குறித்த தகவலை மோசடி மன்னன் பெற்றுள்ளார்.

குறித்த நேரத்தில் பொலிஸார் இந்த கும்பலை கைது செய்ததால், ஐ.பி.எல். வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட இருந்தது தவிர்க்கப்பட்டுள்ளது.