WannaCry ரன்சம்வெயார் வைரஸைத் தொடர்ந்து தாக்க வருகிறது UIWIX : சீனா எச்சரிக்கை!!

367

உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான கணினிகளைத் தாக்கிய WannaCry ரன்சம்வெயார் வைரஸைத் தொடர்ந்து, மீண்டும் அதேபோல ஒரு இணையத் தாக்குதலை நிகழ்த்த மற்றொரு வைரஸ் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

கணினிகளில் உள்ள கோப்புகளைத் தாக்கி மறைத்து, பணம் தரும் வரை கணினிகளின் செயற்பாடுகளை முடக்குகிறது ரன்சம்வெயார் வைரஸ்.

அந்த வகையிலான WannaCry என்னும் வைரஸானது இந்த வார துவக்கத்தில் உலகமெங்கும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கணினிகளைத் தாக்கியது.

இந்த தாக்குதலிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், WannaCry போன்ற குணங்களை உடைய UIWIX என்னும் மற்றொரு புதிய வைரஸ் உலகமெங்கும் உள்ள கணினிகளைத் தாக்கும் அபாயம் இருப்பதாக, சீனாவின் தேசிய கணினி வைரஸ் அவசர நிலை செயற்திட்ட மையம் எச்சரித்துள்ளது.

WannaCry போலவே இதுவும் விண்டோஸ் ஒப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள குறைகளைப் பயன்படுத்தியே கணினிக்குள் ஊடுருவுகிறது. வைரஸால் தாக்கப்பட்ட கோப்புகளை .UIWIX என்னும் எக்ஸ்டென்ஷன் கொண்டதாக இது மாற்றிவிடும்.

ஆனால், இதுவரை எந்தவிதமான தாக்குதலும் கண்டறியப்படவில்லை. இருந்தபோதிலும், அவசரநிலை செயற்திட்ட மையமானது உஷார் நிலையில் உள்ளது என சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.