ஒரே நாளில் இலங்கையில் 91 பேர் பலி : 110 பேர் மாயம் : 5 இலட்சம் பேர் பாதிப்பு!!

674

நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி இவர்கள் பலியாகியுள்ளார்கள்.

மேலும் குறித்த அனர்த்தத்தில் 5 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை முதல் நாட்டின் பல பாகங்களிலும் இயற்கை அனர்த்தத்தால் பலர் பாதிக்கப்பட்டதுடன், அதிலும் குறிப்பாக களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த வகையில் இதுவரை 5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 110க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த அனர்த்தத்தினால் 300 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 20,000 மக்கள் மண்சரிவினால் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி களுத்துறை மாவட்டத்தில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

மாத்தறை – தெனியாய, மொரவகந்த பிரதேசத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், 16 பேர் காணாமல் போயுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காணாமல் போயுள்ளவர்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்கப்படுவதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரே நாளில் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.