பறக்கும் விமானத்தில் நபரின் செயல் : 10 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்!!

245

பறக்கும் விமானத்தின் கழிவறையில் பிரித்தானிய நபர் ஒருவர் புகை பிடித்த குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவின் Coates Road, Kidderminster பகுதியை சேர்ந்தவர் 46 வயதான ஜான் காக்ஸ். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிர்மிங்க்ஹாம் விமான நிலையத்தில் இருந்து எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார்.

விமானம் 33,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது கழிவறைக்கு சென்ற ஜான் காக்ஸ் புகை பிடித்ததாக கூறப்படுகிறது. கழிவறையில் இருந்து புகை மூட்டம் எழுந்ததும் நெருப்பு போன்ற அசம்பாவித சம்பவத்தின்போது எழுப்பப்படும் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள் உடனடியாக விமானிக்கு அளித்த புகாரின் அடிப்படையில் விமானத்தை அவசரமாக தரையிறக்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து எகிப்திய அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பிரித்தானியர் ஜான் காக்ஸ் கழிவறையில் புகை பிடித்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பியதுடன் நில்லாமல் அவர் மீது பல பிரிவுகளில் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 4 ஆண்டுகளும் 6 மாதமும் சிறை விதித்து பிரித்தானியாவில் உள்ள கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே விமான நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு செய்ததில், குறித்த நபருக்கு வழங்கப்பட்ட தண்டனையானது மிகவும் குறைவு எனவும், இது எஞ்சியோருக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு 9 ஆண்டுகளும் 6 மாதமும் சிறை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த சம்பவம் நடந்த Monarch Airbus விமானத்தின் விமானி இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக விமானியாக பணியாற்றி வருகிறேன், ஆனால் இதுபோன்ற ஒரு ஆபத்தை வரவழைக்கும் செயல் இதுவே முதன் முறை என்றார்.