வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 146 பேர் உயிரிழப்பு, 112 பேர் மாயம்!!

415


 
நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 146 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 100 இற்கும் அதிகமானோர் காணாமற் போயுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.



இயற்கை அனர்த்தத்தினால் 4,23068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்களில் 46,358 பேர் 32 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



காலி மாவட்டத்தில் 28,270 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.



காலியில் 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் 10 பேர் காணாமற் போயுள்ளனர்.


இரத்தினபுரி மாவட்டத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காணாமற் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் மாலினி லொகுபோதாகம தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் 20,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.


வௌ்ளம் மண்சரிவினால் கேகாலை மாவட்டத்தில் 1439 குடும்பங்கள் பாதிக்கப்பட்டள்ளன.

இவர்கள் 22 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வௌ்ளத்தினால் கம்பஹா மாவட்டத்தின் 99 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

பியகம, களனி,வத்தளை, தொம்பே, கம்பஹா மற்றும் மஹர பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


42 முகாம்களில் 16,852 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 24 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 14 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீட்பு பணிகளுக்காக 1700 இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.