வவுனியாவில் வடக்கு முதல்வருக்கு எதிராக கொடும்பாவி எரிக்கப்படும் : க.ஞானசீலன்!!

494

வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். அத்துடன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொடும்பாவி எரிப்போம் என தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர் க.ஞானசீலன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி என்ற வகையில் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு நாம் எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

முதலமைச்சர் இரண்டு நீதிபதிகளையும், ஒரு அரச உத்தியோகத்தரையும் வைத்து இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தார்.

அந்த விசாரணை அறிக்கை சரிவர வெளிவந்த பின்பு அதாவது இரண்டு அமைச்சர்கள் குற்றமிழைத்தார்கள் என்றும், இரண்டு அமைச்சர்கள் நிரபராதிகள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அறிக்கையில் நிரபராதிகள் என தெரிவிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் ஒரு மாத கட்டாய விடுமுறையில் அனுப்புவதென்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.

நீதீபதிகள் அடக்கிய விசாரணைக் குழுவின் அறிக்கையை ஒரு நீதியரசர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நீதியான விசாரணை நடத்தப்படவில்லை என்பது தெளிவாக புலனாகின்றது.

எனவே வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் மீது வீன் பழியை முதலமைச்சர் சுமத்தியுள்ளார்.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். விசாரணைக் குழுவின் அறிக்கையின் தீர்ப்பை அவர் சரியாக பார்க்கவில்லை. அவர் அரசியல் இலாபத்திற்காக செயற்பட்டுள்ளார்.

இதற்கு எமக்கு நீதி வேண்டும். கிடைக்காவிட்டால் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட குழு முதலமைச்சருக்கு எதிராக கொடும்பாவி எரிப்போம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியில் குறித்த நபர் எந்த பதவியிலும் இல்லை என அவ் அணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.