முதலமைச்சரின் நேர்மையான செயற்பாட்டிற்கு ஆதரவாக நிற்போம் : யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!!

528

உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்குகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் வடமாகாண முதமைச்சரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு எத்தனிக்கும் அரசியல் சக்திகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

முதலமைச்சரின் நடவடிக்கை தமிழ் அரசியல் போக்கில் ஊழல்கள் செய்ய எத்தனிக்கும் அரசியல் வாதிகளுக்குப் பாடம் புகட்டுவதாகவும், தூய்மையான அரசியல் போக்கிற்கான ஒரு பலமான அத்திவாரமாகவும் அமையும் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் பாராட்டி வரவேற்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக “வடமாகாண சபையில் தற்போது இடம்பெறுகின்ற அரசியல் செயற்பாடுகள் தொடர்பான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு” எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூன்றாம் உலக நாடுகளின் சமகால அரசியல் தலைமைகளின் மத்தியில் அரசியல் வாதிகளின் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகக் காத்திரமான முடிவினைத் துணிகரமாக மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சரைப் பல்கலைக்கழகச் சமூகம் சார்பாகப் பாராட்டி நிற்கின்றோம்.

வடமாகாண முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கட்சிகளுக்கும், அதனைச் சார்ந்த அரசியல் வாதிகளிற்கும் தமிழ் மக்களின் குரலாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இக்கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகள் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழப்பதோடு மாணவர்களிடமிருந்தான எதிர்மறையான விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.

தமிழ் மக்களின் கொள்கைகளையும், அபிலாசைகளையும் நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்லும் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல் கட்சிகள் மற்றும் அதனுடன் சார்ந்த அரசியல் வாதிகளின் நடவடிக்கையாகவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கருதப்படுகின்றது.

மேலும், இச் செயற்பாட்டிற்கு எதிராகவும், முதலமைச்சரின் நேர்மையான செயற்பாட்டிற்கு ஆதரவாகவும் நிற்போம் என்பதனை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.