தம்பியை காப்பாற்ற பாய்ந்த அண்ணன் : இருவரும் பலியான சோகம் : உடல்களை பொறுக்கி எடுத்த பாட்டி!!

495

அண்மையில் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த சகோதரனும் அவரை அழைத்துச் செல்ல வந்த அவரின் தம்பியுமே இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.

செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில் இருவரும் ரயிலில் மோதுண்டு அகால மரணமடைந்தனர்.

இந்நிலையில் செல்பி எடுக்க முயற்சித்து உயிரை பறிகொடுத்த சகோதரர்கள் பற்றி, அவர்களின் பாட்டி கண்ணீருடன் ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதில்,

“ரயில் ஒன்று வருவதாக கூறி கடைசி மகனுக்கு நான் சத்தமிட்டேன். இதன்போது திடீரென சிறிய மகன் ரயில் வீதியில் பாய்ந்து அண்ணன் இருக்கும் இடத்திற்கு வந்தார்.

வர வேண்டாம் என கூறிய நிலையில் தம்பியை காப்பாற்றுவதற்கு மூத்த மகன் பாய்ந்த போது இருவரும் ரயிலில் மோதுண்டுள்ளனர்.

இராணுவத்தில் சேவை செய்து ஓய்வு பெற்ற கோப்ரலான 49 வயதுடைய பிரசந்த பிரியங்கர ரணவீர மற்றும் ஓய்வு பெண் சிப்பாயான ஆ.ஏ.பண்டார மெனிக்கே தம்பதியினரின் மூன்று பிள்ளைகளில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த அநுராதபுரம் தூய ஜோசப் வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஷஷி மதுஷான் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறிக்காக சிங்கபூர் நோக்கி சென்றார். இந்த நிலையில் மூன்று வருடங்களின் பின்னர் நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.

தனது மகன் சிங்கபூரில் கற்கைகளை நிறைவு செய்து விட்டு சான்றிதழுடன் நாட்டுக்கு வருகின்றார். அவரை அழைத்து வருவதற்காக தாய், தந்தை, சகோதரர்கள், பாட்டி உட்பட உறவினர்கள் அந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.

அவர்கள் கட்டுநாயக்கவில் இருந்து அதிவேக வீதி ஊடாக கொழும்பிற்கு வந்து காலிமுகத்திடலில் நேரத்தை செலவிட்டுள்ளனர்.

பின்னர் கொள்ளுப்பிட்டியிலுள்ள சித்தியின் வீட்டிற்கு செல்வதற்கு அவர்கள் ஆயத்தமாகியுள்ளனர். அதன்போது கடற்கரைக்கு அருகில் ரயில் பயணிக்கும் இடத்தில் புகைப்படம் எடுப்பதற்காக வேனை நிறுத்துமாறு சிறிய மகன் தந்தை உட்பட அனைவரையும் கேட்டுள்ளார்.

“சிறிய மகன் தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என வாகனத்தை நிறுத்தினார். எனினும் நாங்கள் விரும்பவில்லை. பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி அண்ணனும் தம்பியும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

நானும் அந்த இடத்திற்கு சென்றேன். அதன் போது நேரம் 5.45 ஆகும். மின்விளக்குடன் ரயில் வருவதனை அவதானித்தேன். கடல் அலைகளின் சத்தம் காரணமாக ரயில் அருகில் வரும் வரை ரயில் சத்தம் கேட்கவில்லை.

ரயில் வருவதாக சிறிய மகனுக்கு நான் கூச்சலிட்டேன். இதன் பின்னர் சிறிய மகன் அண்ணன் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார். வரவேண்டாம் என கூறிய நிலையில் தம்பியை காப்பாற்றுவதற்கு ஷஷி முயற்சித்த போது ரயிலில் மோதுண்டனர்.

அதன் பின்னர் இருவரும் அந்த இடத்தில் விழுந்து கிடந்தனர். சிறிது நேரம் செல்லும் வரை அவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ஒருவரும் முன்வரவில்லை. பெரிய மகனின் கால்கள் வேறு வேறாக கிடந்தன. ஒரு காலை எடுத்து நான் முச்சக்கர வண்டியில் வைத்தேன்.

பாட்டி ஒருவரால் இதனை தாங்கிக் கொள்ள முடியுமா? சிறிய மகனின் தலை பகுதியை காணவில்லை. அம்மாவும் அப்பாவும் இதனை பார்த்து அழுதார்கள்.

சான்றிதழ் பெற்று வந்து அதனை எங்களிடம் காட்டாமலே எங்கள் பிள்ளை எங்களை விட்டு சென்று விட்டார்.. என அழுதவாறு பாட்டி சம்பவத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி மாலை கொள்ளுப்பிட்டிய ரயில் வீதியில் செல்பி எடுக்க முயற்சித்து ரயிலில் மோதுண்டு சகோதரர்கள் உயிரிழந்தனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த ஷஷி மதுஷான் ரணவீர என்ற 24 வயது இளைஞனும் தீக்ஷன ஷக்ஷான் ரணவீர என 12 வயது சிறுவனும் இவ்வாறு உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பற்ற இடங்களில் பொறுப்பற்ற வகையில் செல்பி புகைப்படங்கள் எடுப்போருக்கு இவர்களின் மரணம் ஒரு பாடமாக இருக்கும் என்பது உண்மை.