வவுனியாவில் கருணாவின் வருகையினால் அசாதாரண நிலை!!

337

 
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெறவிருந்த நிலையில், அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா, கிடாச்சூரி பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இன்று(18.06.2017) இடம்பெறவிருந்தது.

எனினும் குறித்த பொது நோக்கு மண்டபம் கட்சி கூட்டங்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும், கலந்துரையாடல் குறித்து பொது மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு முறையான அனுமதி பெற்றிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் கருணா மக்கள் சந்திப்பு

வவுனியா கிடாச்சூரி பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (18.06.2017) காலை 11.00 மணியளவில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெறவிருந்தது.

மக்களின் எதிர்ப்பினையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெறவிருந்த கூட்டமும் நிறுத்தப்பட்டு கிடாச்சூரி பகுதியிலுள்ள பொதுமகன் ஒருவரின் இல்லத்தில் 12.30 மணியளவில் கூட்டம் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன், உபதலைவர் சோமசுந்தரம் சிறீகரன், ஊடகப் பேச்சாளர் சூசைமுத்து வசந்தகுமார், பொருளாளர் கிருஷ்ணபிள்ளை உதயகுமார் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.