இந்தியாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய பாகிஸ்தான் : சம்பியன்ஸ் கிண்ணத்தில் வரலாற்றுச் சாதனை!!

470
LONDON, ENGLAND – JUNE 18: Pakistan captain Sarfraz Ahmed celebrates with a prayer after winning the ICC Champions Trophy Final between India and Pakistan at The Kia Oval on June 18, 2017 in London, England. (Photo by Gareth Copley/Getty Images)

 

சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் ரோஹித்,கோலி, டோனி உள்ளிட்டோர் துடுப்பெடுத்தாட்டத்தில் அசத்த தவறியமையால் இந்திய அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது. பகர் ஜமான் சதம் அடிக்க, பாகிஸ்தான் அணி முதல் முறையாக கிண்ணத்தினை கைப்பெற்றியது.

லண்டன் ஒவல் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில்,கிரிக்கெட் விளையாட்டு உலகின் ‘பரம எதிரிகள்’ என கூறப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ருமான் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட முகமது ஆமிர் அணியில் சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி, பகர் ஜமான் ஜோடி ஆரம்பத்துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கினர். பும்ரா 4 ஆவது ஓவரின் முதல் பந்தை ‘நோ போலாக’ வீச, பகர் கண்டம் தப்பினார். பின், இருவரும் சிறப்பாக துடுப்பாட்டத்தில் செயல்பட்டனர். அரை சதம் அடித்த அசார் (59) ரன்–அவுட்டானார். தொடர்ந்து அசத்திய பகர், ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்தார். இவர் 114 ஓட்டங்களில் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார்.

பாபர் அசாம் 46 ஓட்டங்கள் எடுத்தார். பின், இணைந்த ஹபீஸ், வசிம் அதிரடியாக ரன் சேர்த்தனர். ஹபீஸ் அரை சதம் அடித்தார். முடிவில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 338 ஓட்டங்கள் எடுத்தது. ஹபீஸ் (57), வாசிம் (25) ஆட்டமிழப்பின்றி களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர், பாண்ட்யா, ஜாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அமிர் வேகத்தில் முதல் ஓவரில் ரோஹித் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். பின், வந்த அணித்தலைவர் கோலியும் (5) இவரிடமே சிக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஷிகர் தவான் 21 ஓட்டங்களுடன் களத்தினை விட்டு வெளியேறினார். ஷாதப் சுழலில் யுவராஜ் சிங் (22) வெளியேறினார்.

இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி 4 ஓட்டங்களில் வெளியேற, ஜாதவ் (9) நிலைக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தினையும் ஆறுதலும் அளித்தார். அரை சதம் கடந்த இவர் 76 ஓட்டங்கள் பெற்றவேளை ஆட்டமிழந்தார். மற்றவர்களும் ஏமாற்ற, இந்திய அணி 30.3 ஓவரில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆமிர், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.