வவுனியாவில் வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் : நோயாளிகள் அவதி!!

224

 
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரி சுகாதார அமைச்சு அமைந்துள்ள வளாகத்திற்கு முன்பாக நேற்றையதினம் (21.06.2017) மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் சுகாதார அமைச்சுக்குள் நுழைய முற்பட்ட மாணவர்களை பொலிஸார் கலைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 30 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் இன்று (22.06.2017) நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் இன்று (22.06.2017) காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8மணி வரை 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் இயங்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் மூன்று தடவைகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

** மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் கடந்த 22.05.2017 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

** மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் கடந்த 05.05.2017 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

** மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் கடந்த 07.04.2017 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.