2011 உலக கிண்ண இறுதிப் போட்டியில் மோசடி?

320

2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தானும் கோருவதாக, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல் 2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் என்ன நடந்தது என்பது தொடர்பிலும் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் கோரியுள்ளார். கொழும்பில் நேற்று காலை ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

வெள்ளை ஆடையில் மூடிக்கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களின் உள்ளுக்குள் என்ன இருக்கிற்து என்பது எனக்கு நன்றாக தெரியும்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரியாக அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பணியாற்றிய எஸ்.லியனகம இருந்தார்.

சங்கக்கார விசாரணை நடத்த வேண்டும் என்கிறார். நானும் அதனையே கூறுகிறேன். லாகூர் சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் நான் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக இருந்த போது ஆசிய கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்தினோம்.

அப்போது இலங்கை அணியின் வீரர்களுக்கு சிறந்த பாதுகாப்பு இருந்தது. இதன் பிறகு ஐ.பி.எல். போட்டிகளுக்கு செல்ல வேண்டும் என சாலி ஒஸ்டினின் அணியினர் என்னிடம் கூறினர்.

நாட்டை காட்டிக்கொடுத்து அதற்கான கடிதத்தில் என்னால் கையெழுத்திட முடியாது என்று நான் சொன்னேன்.இதற்கு பிறகு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே என்னை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் இருந்து விலகினார்.

அதற்கு பிறகே பாகிஸ்தான் சுற்றுப் பயணம் நடந்தது. அங்கு இலங்கை கிரிக்கெட் அணியினர் ஆபத்துக்கு உள்ளாகினர்.

இதனால் விசாரணை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். ஆனால், ஒன்றை மறக்க வேண்டாம் பாகிஸ்தானுக்கு சென்ற வீரர்கள் அதற்கு முன்னர் அங்கு நடந்த ஆசிய கிண்ணப் போட்டிகளுக்கும் சென்றிருந்தனர்.

இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. இந்தியாவில் குண்டு தாக்குதல் நடக்கும் ஐ.பி.எல். வேண்டாம் என எமது வீரர்கள் கூறுவார்களா?. ஆனால், நாட்டுக்காக விளையாடும் போது குண்டு தாக்குதல் நடக்கும் என பேசும் பல வீரர்கள் உள்ளனர் எனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.