வவுனியா சமூகசேவை அலுவலகம் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பத்திற்கு உதவி!!

493

 
வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் மூலம் கொக்குவிலைச் சேர்ந்த லண்டன் வாழ் நலன் விரும்பிகளான திரு திருமதி குமார் வத்ஸி குடும்பம் , திரு.செல்வநாதன் குடும்பம் , அமரர் சிவானந்தனின் பேரப் பிள்ளைகள் இணைந்து பல தடவைகள் வாழ்க்கையின் விரக்தி நிலைக்கு சென்று காப்பற்றப்பட்ட திருமதி ம. சுபாசினியின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிகள், உலர் உணவுப்பொதிகள், பிள்ளைகளுக்கான பாதணிகள், புத்தகப்பைகள், சீருடைக்கான துணிகள் மற்றும் துவிச்சகக்கர வண்டி என்பன வழங்கி வைத்தனர்.

சுபாசினி தொடர்பான பிரச்சனை அயலவர்கள் மூலம் மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பெண்ணின் பிரச்சனையை முகப்புத்தகம் மூலம் தெரியப்படுத்தியவேளை சமூக ஆர்வலர்கள் மூலம் குறித்த பொருட்கள் மாவட்ட சமூகசேவை அலுவலகத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் நாளாந்தம் இவரின் பிள்ளைகள் காலை ஆகாரம் இன்றி பாடசாலை வருவதால் காலை உணவுக்கான ஏற்பாட்டினையும் நாளாந்தம் வழங்க பாடசாலை அதிபர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (18.07.2017) செவ்வாய்க்கிழமை வவுனியா மூன்றுமுறிப்பு பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வு பாடசாலை அதிபர் கே .பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.

இதில் விசேட விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா பொது வைத்தியசாலை உளவள வைத்தியநிபுணர் வைத்தியகலாநிதி சி.சிவதாஸன் மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கான ஆற்றுப்படுத்துகை விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தினார்.

‘மாணவர்கள் தமது நுண்ணறிவு கல்வியறிவு என்பவற்றை வளர்த்து வரும் அதேவேளை புறச்சூழல்களால் பாதிக்கப்படாது தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் . ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் . மதுபோதை மற்றும் தீய பழக்கங்ளை மாணவர்கள் புறந்தள்ளப்பழகவேண்டும் . எல்லாவற்றுக்கும் தலை அசைப்பதை விட சிலவற்றை மறுக்கப் பழக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

அதிபர் தனது உரையில் சுபாசினியின் குடும்பம் பல சவால்களை சந்தித்து வருவதை நாம் நன்கு அறிவோம் . இவர்களுக்கு இந்த உதவி அவசியமானதுடன் அவசரமானதும் ஆகும். சுபாசினியின் 3 பிள்ளைகளும் கல்வி கற்கக்கூடியவர்கள்.

இவர்களுக்கு காலை உணவு கூட பெரும் போராட்டம். அதிகநாட்கள் தாமதமாகியே பாடசாலை வந்திருக்கிறார்கள் . இந்த நிலையில் மாவட்ட சமூக சேவை அலுவலகர் எஸ்.எஸ்.வாஸன் மேற்கொண்ட இந்த முயற்சிக்கும் இந்த உதவியைச் செய்த லண்டன் வாழ்நலன் விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

நிகழ்வில் நான்காம் ஆண்டு ஆங்கிலமொழி கல்வியில் திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 5 திறமையான மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி நூல் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை உப அதிபர்கள் வி.சற்குணராசா திருமதி விஜயராணி நிலாநேசன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.கே.வசந்தன், செல்வி கலைவாணி, தாதிய உத்தியோகத்தர் சுதாகரன் சமூக நலன் உத்தியொகத்தர் விஜிதரன் சமூக ஆர்வலர் புருசோத்தமன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.