வவுனியா புதிய பேருந்து நிலையம் இயங்கும் திகதியை அமைச்சர் அறிவிப்பார் : செ.மயூரன்!!

482

வவுனியா புதிய பேருந்து நிலையம் இயங்கும் திகதி தொடர்பில் எதிர்வரம் 21ஆம் திகதி அமைச்சர் அறிவிப்பார் என வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தினை இயக்குவது தொடர்பிலான கூட்டம் நேற்று மாலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைப்பாதாக அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்திருந்த போதிலும் மாற்று வழியினூடாக அவர் வெளியேறியிருந்தார்.

இந்த நிலையில் இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனிடம் கேட்டபோது,

புதிய பேருந்து நிலையத்தினை ஆரம்பிப்பது தொடர்பாகவும் 60இற்கு 40 என்ற இணைந்த நேர அட்டவணை தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், புதிய பேருந்து நிலையததில் இருந்து மாவட்டங்களுக்கு இடையிலானதும், மாகாணங்களுக்கு இடையிலானதுமான பேருந்து சேவைகளை மேற்கொள்வது எனவும் தற்போது நகர மத்தியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் சேவையை செயற்படுத்துவது எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நடைமுறையை ஒரு மாத காலத்திற்கு செயற்படுத்துவது என இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வர்த்தகர் சங்கத்தினர் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் முழுமையாக சென்றால் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவர் என்ற கோரிக்கையை இதன்போது முன்வைத்திருந்தனர். இதன் பிரகாரமும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் நேரக்காப்பாளர்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் வவுனியாவில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து எப்போது சேவையை ஆரம்பிப்பது என்பது தொடர்பில் அமைச்சர் டெனீஸ்வரன் தீர்மானத்தினை எடுப்பார்.

இந்த செயற்பாட்டின்போது 60இற்கு 40 என்ற நேர அட்டவணையும் ஒரு மாத காலத்திற்கு பரீட்சாத்தமாக நடைமுறைப்படுத்தப்படும். இது எந்தளவிற்கு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை.

எனினும் சாத்தியப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இவற்றையும் தாண்டி இந்த பேருந்து நிலையத்தினை திறப்பதில் காணப்படும் இழுபறி நிலைக்கு பின்னால் பெரிய அரசியல் சக்தி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இல்லையானால் பெரும் தொகையில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளமை தொடர்பில் அரசாங்கம் அக்கறையின்றியுள்ளது.

குறிப்பாக இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் இலங்கை மக்கள் காங்கிரஸ், சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன தொழிற்சங்கங்களை உருவாக்கியுள்ளன.

மேலும், தமது அரசியல் செயற்பாடுகளுக்காக தொழிற்சங்கங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் என வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் குறிப்பிட்டுள்ளார்.