புகையிரதக்கடவை காப்பாளர்களின் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றது எனக் குற்றச்சாட்டு!!

488

புகையிரதக்கடவை காப்பாளர்களின் தொழில் உரிமைகள் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேற்று (19.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜெ.றொகான் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

கடந்த மூன்று வருடங்களாக நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளத்திற்கு பணியாற்றி வருவதாகவும் அதன் காரணமாக புகையிரதக்கடவை பாதுகாப்பு ஊழியர்களின் தொழில் உரிமைகள் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதுடன் புகையிரதக்கடவை பாதுகாப்பு ஊழியர்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வேண்டுகோளுக்கு அமைவாக புகையிரதத்திணைக்களகத்திற்குள் உள்வாங்கப்ட இருப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்படாமல் புகையிரதக் கடவை காப்பாளர்களாக பணியாற்றிய அனைவரும் புகையிரத திணைக்களகத்திற்குள் உள்வாங்கப்படவேண்டும். அவர்கள் புறக்கணிக்கப்பட்டால் எமது ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவிதமான உதவித்திட்டங்களும் புகையிரதக்கடவை ஊழியர்களுக்கு கிடைப்பதில்லை என குற்றஞ்சாட்டினார்.

அதே போன்று நாடளாவிய ரீதியில் சமூர்த்தி பயனாளிகள் மீளாய்வு செய்யப்பட்டுவரும் நிலையில் எமது புகையிரதக்கடவை பாதுகாப்பு ஊழியர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள் என சுட்டிக்காட்டினார்.

நாங்கள் எங்களது உயிர்களை பணயம் வைத்தே பணியாற்றி வருகிறோம் ஆகவே அரச அதிகாரிகள் புகையிரதக்கடவை பாதுகாப்பு ஊழியர்களின் விடயத்தில் கரிசனை கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.