யூடியூபின் குழந்தைகள் பாதுகாப்பு செயற்பாடு தோல்வி!!

319


யூடியூபில் குழந்தைகள் பாதுகாப்பை நிர்வகிக்கும் அமைப்பு தோல்வியடைந்து விட்டதாக அந்த நிறுவனத்தின் தன்னார்வக் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.



குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் நபர்கள் அல்லது அதற்கு விரும்பும் நபர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவார்கள் என்ற மனப்பான்மை இருந்து கொண்டேதான் இருக்கிறது. யூடியூபும் அதைத் தெரிந்து வைத்துள்ளது.

காணொளிகளைப் பகிரும் இந்தத்தளமானது தன்னுடைய வலைத்தளத்தில் வேண்டத்தகாத பதிவுகள் மற்றும் கருத்துக்களை இடுவதைக் கண்டறிவதற்காக ட்ரஸ்டட் ஃப்ளாக்கர்ஸ் என்ற சிறப்பு வாய்ந்த தன்னார்வக் குழுவைக் கொண்டுள்ளது.



ட்ரஸ்டட் ஃப்ளாக்கர்ஸ் என்ற இந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சில மாதங்களுக்கு முன் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதாக பி.பி.சி. யிடம் தெரிவித்துள்ளனர்.



குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சில பதிவுகள் இருப்பதாக அனுப்பிய பல்வேறு புகார்களில் குறைந்த அளவு புகார்களுக்கு மட்டுமே பதிலளித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.


கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 9,000-க்கும் மேலான புகார்களை தான் அனுப்பியதாகவும், ஆனால் இதுவரை எதுவுமே தீர்க்கப்படவில்லை என்றும் ஒரு தன்னார்வலர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள 526 புகார்களில் 15 பதில்கள் மட்டுமே திரும்பி வந்துள்ளது என்று கூறும் தன்னார்வலர்கள், இந்தத் தளத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லை என்ற பெரிய பிரச்சனையை இது அடையாளப்படுத்தும் கணக்கீடாகவே இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.


பதின்ம வயதுள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் பகிரும் சில காணொளிகளில் விரும்பத்தகாத, ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்துக்களை இடும் நபர்களின் கணக்குகளின் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் வெளியிடும் இந்த காணொளிகளில் ஆபாசமோ அல்லது நிர்வாணத்தை வெளிப்படுத்தும் எந்த வித காட்சிகளும் இல்லாத போதிலும், பாலியல் ரீதியான கருத்துகள் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பதின்ம வயது குழந்தைகளை உடைகள் இல்லாத காணொளிகளை பகிருமாறும், தங்களின் தேகங்கள் குறித்து உரையாடத்தூண்டும் வகையிலும் காணொளிகளின் கீழ் கருத்துகள் இடப்படுகின்றன.

சில நேரங்களில் குழந்தைகளை தனிச்செய்தியில் உரையாட வருமாறும் அழைப்பு விடுக்கின்றனர்.


குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்தும் அல்லது பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்ள விரும்பும் பெடொஃபைல் எனப்படும் நோயுடைய நபர்கள் இந்த வலைத்தளத்தில் உலவுவதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

”எங்களுடைய தளத்தில் குழந்தைகள் மீது பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தும் எந்தவித உள்ளீடுகள் மற்றும் கருத்துகள் இடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு முறையற்ற செயலில் ஈடுபடும் நபர்களின் கணக்கை நீக்கிவிடுவோம்,” என கடந்த மார்ச் மாதம் யூடியூப் நிறுவனம் தெரிவித்தது.

ஆனால், அவர்கள் தங்கள் கொள்கைகளை நடைமுறையில் செயற்படுத்தவில்லை என தன்னார்வலர்கள் பிபிசி-க்கு தெரிவித்துள்ளனர்.