13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த வைர மோதிரத்தை மீட்டுக்கொடுத்தது கரட்!!

391


 
கனடா நாட்டுப் பெண்மணி மேரி கிராம்ஸ் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த வைர மோதிரத்தை அவருக்கு மீட்டுக் கொடுத்துள்ளது கரட் ஒன்று.

2004ம் ஆண்டு அல்பெர்டாவில், தனது காய்கறி பண்ணையில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேரி கிராம்ஸ், தனது திருமணத்தின் போது கணவரால் அணிவிக்கப்பட்ட வைர மோதிரத்தைத் தவறவிட்டார்.



ஆனால் மோதிரம் தொலைந்த சம்பவத்தை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மிகவும் ரகசியமாக வைத்திருந்தார் மேரி கிராம்ஸ். தன் கணவரிடமும் கூறாமல் மறைத்த இந்த ரகசியத்தை அவர் தம் மகனிடம் மட்டும் கூறியிருந்தார்.

தொலைந்த மோதிரத்திற்குப் பதிலாக மலிவு விலை கொண்ட மோதிரம் ஒன்றை வாங்கி அணிந்து கொண்ட மேரி, அதுபோன்ற ஒரு சம்பவமே நடக்காததைப் போன்று சமாளித்து வந்தார்.



கடந்த திங்கட்கிழமையன்று, மேரி கிராம்ஸின் மருமகள் கொலீன் டேலீ தங்கள் காய்கறி தோட்டத்தில் நல்ல தடிமனான கேரட் ஒன்றை பிடுங்கியபோது, அத்தோடு சேர்ந்து மோதிரம் காணாமற்போன ரகசியமும் வெளேியே வந்தது!



ஆம், அந்தக் கேரட்டுக்கு நடுவே காணாமற்போன வைர மோதிரம் சிக்கிக்கொண்டிருந்தது.


மண்ணுக்குள் பல ஆண்டுகளாக மறைந்திருந்த அந்த வைர மோதிரத்தின் ஊடாக வளர்ந்த அந்தக் கேரட், பல ஆண்டுகளுக்குப் பிறகு மோதிரம் கண்டுபிடிக்கப்படக் காரணமாக அமைந்துவிட்டது.

கேரட்டோடு கண்டெடுக்கப்பட்ட மோதிரம் யாருடையது என்பதைத் தெரிந்து கொண்ட மேரியின் மகன் உடனடியாக தம் தாயைத் தொலைபேசியில் அழைத்து தகவலைத் தெரிவித்தார்.


பழைய சம்பவங்களை நினைவுகூரும் மேரி, மோதிரம் தொலைந்ததை தனது கணவரிடம் அப்போதே சொல்லியிருக்கலாம், என கூறியுள்ளார்.

மேரியின் கணவர் தற்போது உயிருடன் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். மேரிக்கு தற்போது 84 வயதாகிறது.

கேரட் ஒன்றில் வைர மோதிரம் கிடைக்கும் சம்பவம் முதன்முறையாக நடக்கவில்லை.

ஸ்வீடன் நாட்டுப் பெண் ஒருவர் தான் தவறவிட்ட திருமண மோதிரத்தை 16 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுத்த சம்பவம் 2011 இல் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.