மின்சார சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது : பல பகுதிகளில் மின் தடை!!

301

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் சம்பள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடைப்பட்டுள்ள மின் விநியோகம் சீர் செய்யப்படாமையினால், மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சம்பள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் கடந்த 13 ஆம் திகதி இந்த பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தது.

2014 ஆம் ஆண்டில் மின் பொறியியலாளர்களை விசேட பிரிவினராக கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட சம்பள உயர்வை போன்று தமது சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும் அல்லது பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு நீக்கப்பட வேண்டும் என பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படவில்லை என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன கூறுகின்றார்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆலோசனைகள், அமைச்சின் செயலாளரினால் மின்சார சபையின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் இன்று தீர்மானமொன்று எட்டப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பில், இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர் சங்கம் ஆகியன இன்று நள்ளிரவு முதல் இணைவதற்கு தீர்மானித்துள்ளன.

இதேவேளை, ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் இராணுவத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தமது வேண்டுகோளுக்கான தீர்வு வழங்கப்படாமையினால் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன.